உக்ரைனுக்குள் படைகளை அனுப்பும் திட்டமில்லை - கைவிரித்த நேட்டோ


உக்ரைனுக்குள் படைகளை அனுப்பும் திட்டமில்லை - கைவிரித்த நேட்டோ
x
தினத்தந்தி 24 Feb 2022 1:52 PM GMT (Updated: 24 Feb 2022 1:52 PM GMT)

100 போர் விமானங்கள், 120 போர் கப்பல்கள் தயார் நிலையில் உள்ளதாக நேட்டோ அறிவித்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் உக்ரைன் மீது ரஷியா இன்று படையெடுத்துள்ளடு. தரைவழி, வான்வெளி தாக்குதல்களை நடத்தி வரும் ரஷிய படைகள் உக்ரைன் தலைநகரை கைப்பற்ற நெருங்கி வருகிறது.

இதற்கிடையில், உக்ரைன் எல்லையில் மால்டோவா, ரூமெனியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, போலாந்து, பெலாரஸ் போன்ற நாடுகள் உள்ளன. இதில், ரூமெனியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, போலாந்து போன்ற நாடுகள் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு என்ற 30 நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன. 

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ளதால் உக்ரைன் எல்லையில் உள்ள நேட்டோ அமைப்பில் அங்கமாக உள்ள நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனில் இருந்து ரஷியா ஐரோப்பிய நாடுகள் மீது படையெடுக்கலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக நேட்டோ பொதுச்செயலாளர் ஸ்டோல்டென்பெர்க் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, உக்ரைனுக்கு நேட்டோ உறுதுணையாக இருக்கும். 

நேட்டோ பாதுகாப்பு அமைப்பு திட்டத்தை நாங்கள் இன்று செயல்படுத்தியுள்ளோம். 

இதன் மூலம், நமது ராணுவ தளபதிகள் தேவைப்படும் இடங்களில் படைகளை அதிகரித்துக்கொள்ளலாம். நேட்டோ அமைப்பின் எந்த படைகளும் உக்ரைனுக்குள் இல்லை. உக்ரைனுக்குள் நேட்டோ படைகளை அனுப்பும் எந்த திட்டமும், எண்ணமும் இல்லை. 

நேட்டோ கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள கிழக்கு பகுதியில் உள்ள நாடுகளில் படைகளை குவித்துள்ளோம். 100-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தயார் நிலையில் எங்கள் வான் எல்லைகளையும் 120-க்கும் மேற்பட்ட போர் கப்பல்கள் வடக்கு முதல் மத்திய தரைக்கடல் வரையிலும் உச்சபட்ச தயார் நிலையில் உள்ளன. ரஷிய ஆதிக்கத்தில் எங்கள் கூட்டணி நாடுகளை இருந்து பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்’ என்றார்.

Next Story