உக்ரைனில் அரசாங்கத்தை மாற்றுவதே ரஷியாவின் இலக்கு - நேட்டோ தலைவர் பேச்சு


உக்ரைனில் அரசாங்கத்தை மாற்றுவதே ரஷியாவின் இலக்கு - நேட்டோ தலைவர் பேச்சு
x
தினத்தந்தி 25 Feb 2022 9:46 PM GMT (Updated: 25 Feb 2022 9:46 PM GMT)

உக்ரைனில் அரசாங்கத்தை மாற்றுவதே ரஷியாவின் இலக்காக உள்ளதாக நேட்டோ தலைவர் தெரிவித்துள்ளார்.

பிரஸல்ஸ்,

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. 

அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. 

இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு கூட்டமைப்பான நேட்டோ அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் உக்ரைனுடன் எல்லையை பகிர்கின்றன.

போலாந்து, ஸ்லொவாகியா, ஹங்கேரி, ரூமெனியா ஆகிய நாடுகள் உக்ரைனுடன் எல்லையை பகிரும் நேட்டோ நாடுகளாகும். இதனால், உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் நேட்டோ படையை நேரடியாக போருக்குள் இழுக்கமால் என்ற அச்சம் நிலவி வருகிறது. அவ்வாறு நிகழும் பட்சத்தில் 3-ம் உலகப்போர் ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், நேட்டோ அமைபின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உக்ரைனில் அரசாங்கத்தை மாற்றுவதே ரஷியாவின் இலக்கு. ரஷியாவின் மிகப்பெரிய படையெடுப்பை வீரமாக எதிர்கொண்டுள்ள உக்ரைன் பாதுகாப்பு படையினருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் ஒட்டுமொத்த ஐரோப்பியாவின் பாதுகாப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல். ஆகையால், இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாக எடுத்துள்ளோம்’ என்றார்.

Next Story