உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கியது பிரான்ஸ் - அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்


உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கியது பிரான்ஸ் - அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
x
தினத்தந்தி 26 Feb 2022 4:58 PM GMT (Updated: 26 Feb 2022 4:58 PM GMT)

பிரான்ஸ் அரசு தங்களுக்கு ஆயுத உதவிகளை வழங்கியிருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கீவ்,

உக்ரைன்-ரஷியா இடையிலான போர் 3-வது நாளாக இன்று தொடர்ந்து வருகிறது. உக்ரைனுக்கு நேரடியாக ராணுவ படைகளை அனுப்பும் திட்டமில்லை என அமெரிக்காவும், நேட்டோ கூட்டமைப்பும் கூறிய நிலையில், மேற்கத்திய நாடுகள் தங்களை முற்றிலுமாக கைவிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி  வேதனை தெரிவித்திருந்தார்.  

இதற்கிடையில் நேட்டோ கூட்டமைப்பில் உள்ள சில நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடை விதிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தன. ஒரு சில நேட்டோ நாடுகள் ஏற்கனவே பொருளாதார தடைகளை விதித்திருக்கின்றன. ஆனால் நேரடியாக எந்த நாடும் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளையோ, படைகளையோ அனுப்பவில்லை. பொருளாதாரத் தடைகளைத் தாண்டி உலக நாடுகள் ஏதேனும் செய்ய வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த சூழலில் நேற்றைய தினம் ஸ்வீடன் அரசு தங்களுக்கு ராணுவ உதவிகளை வழங்க முன்வந்திருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தொழில்நுட்ப ரீதியான உதவிகளையும் ஸ்வீடன் அரசு செய்து கொடுத்திருப்பதாகவும், ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைப்போம் என்றும் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இன்று உக்ரைன் அதிபர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானிடம் தொலைபேசியில் பேசியதாகவும், அப்போது ரஷியாவிற்கு எதிரான போரில் பிரான்ஸ் தங்கள் நாட்டிற்கு உதவ முன்வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பிரான்சில் இருந்து ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் தங்கள் நாட்டிற்கு வந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், பிற நாடுகளுடனான உக்ரைனின் ராஜாங்க உறவில் இன்று புதிய அத்தியாயம் தொடங்கியிருப்பதாக கூறியுள்ளார்.

Next Story