உக்ரைன் மீதான போரின் முக்கிய நோக்கம் இது தான் - ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி கூறிய தகவல்


Image Courtesy: AFP
x
Image Courtesy: AFP
தினத்தந்தி 29 March 2022 11:18 AM GMT (Updated: 29 March 2022 11:18 AM GMT)

உக்ரைன் மீது போர் தொடுத்ததற்கான நோக்கம் இது தான் என்று ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி கூறியுள்ளார்.

மாஸ்கோ,

உக்ரைன் மீது ரஷியா 34-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. 

பெலாரஸ் நாட்டில் உக்ரைன் - ரஷியா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே துருக்கியில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடந்து வரும் சூழ்நிலையியிலும் உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் கீவ்வை நெருங்கி வரும் ரஷிய படைகளை எதிர்த்து உக்ரைன் படைகள் சண்டையிட்டு வருகிறது. உக்ரைனை ரஷியா உடனடியாக கைப்பற்றிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேற்கத்திய நாடுகளின் உதவியால் உக்ரைன் தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது. 

தலைநகர் கீவ்வை ரஷிய படைகள் தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில் உக்ரைன் படைகள் தொடர்ந்து தடுத்து வருகின்றன. மேலும், ரஷியா ஏற்கனவே கைப்பற்றிய நகரங்களையும் உக்ரைன் படைகள் தற்போது மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருகின்றனர். இது ரஷியாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், உக்ரைன் மீது போர் தொடுத்ததற்கான நோக்கம் என்ன என்பதை ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி கூறியுள்ளார். 

இது தொடர்பாக ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி செர்ஜி ஷெய்கு கூறுகையில், டான்பாஸ் (உக்ரைன் நகரம்) நகரை விடுதலை செய்வதே இந்த ராணுவ நடவடிக்கையின் முதன்மை நோக்கம். ஒட்டுமொத்தமாக இந்த ராணுவ நடவடிக்கையின் முக்கிய நோக்கத்தின் முதல்படி நிறைவேறிவிட்டது. நிர்ணயிக்கப்பட்ட நோக்கங்கள் முழுவதும் நிறைவேறும்வரை உக்ரைனில் ரஷியாவின் ராணுவ நடவடிக்கை தொடர்ந்து நீடிக்கும்’ என்றார்.  

Next Story