இந்தியர்கள் மிகவும் சுயமரியாதை கொண்டவர்கள் - பாக். பிரதமர் இம்ரான்கான் புகழாரம்


Image Courtesy: AFP
x
Image Courtesy: AFP
தினத்தந்தி 8 April 2022 7:13 PM GMT (Updated: 8 April 2022 7:13 PM GMT)

இந்தியர்கள் மிகவும் சுயமரியாதை கொண்டவர்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

லாகூர்,

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. 

இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு கடந்த 3-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், வாக்கெடுப்பிற்கு முன்னதாக பிரதமர் இம்ரான்கானின் பரிந்துரையை ஏற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்தார். இதனால், இம்ரான்கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறவில்லை. மேலும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து 60 நாட்களில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத்தொடர்ந்தன. இந்த வழக்கை நேற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது எனவும்,பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று (9-ம் தேதி) காலை 10.30 மணிக்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் அதிரடியாக உத்தரவிட்டது. 

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் பிரதமர் இம்ரான்கான் நேற்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நாட்டு மக்கள் இன்று (சனிக்கிழமை) வீதிகளில் இறங்கி போராட வேண்டும் என இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், தனது அரசை கவிழ்க்க அமெரிக்கா முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது இம்ரான்கான் இந்தியவை புகழ்ந்து பேசியுள்ளார். இம்ரான்கான் பேசுகையில், இந்தியர்கள் மிகவும் சுயமரியாதை கொண்டவர்கள். எந்த ஒரு வல்லரசு நாடும் இந்தியாவுக்கு கட்டளையிட முடியாது. ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்கள் மற்றும் காஷ்மீருக்கு என்ன நடத்தப்பட்டது ஆகியவற்றால் நான் ஏமாற்றமடைந்தேன். இதனால், இந்தியாவுடன் நாம் நட்புறவு மேற்கொள்ளவில்லை’ என்றார்.   


Next Story