போலந்து அதிபர் கொல்லப்பட்ட விமான விபத்துக்கு ரஷியாவே காரணம்..! விசாரணை அறிக்கையில் தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 13 April 2022 1:18 AM GMT (Updated: 13 April 2022 1:18 AM GMT)

போலந்து அதிபர் கொல்லப்பட்ட விமான விபத்துக்கு ரஷியாவே காரணம் என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார்சா, 

போலந்து நாட்டின் அப்போதைய அதிபர் லெக் காசின்ஸ்கி கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் 10-ந் தேதி சோவியத் தயாரிப்பு விமான ‘டியூ-154 ஏம்’ விமானத்தில் ரஷியாவுக்கு சென்றார். அவருடன் அரவது மனைவி, மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை வீரர்கள் என 94 பயணம் செய்தனர். 

இந்த விமானம் ரஷிய எல்லைக்குள் விழுந்து நொறுங்கியதில் அதிபர் லெக் காசின்ஸ்கி உள்பட 95 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்நிலையில், இந்த விமான விபத்து குறித்து விசாரிக்க போலந்து அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு ஆணையம், 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திய விசாரணைக்கு பின்னர் நேற்று முன்தினம் தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. 

அதில் அதிபர் லெக் காசின்ஸ்கி உள்பட 95 பேர் கொல்லப்பட்ட விமான விபத்துக்கு ரஷியாவின் சதியே காரணம் என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை ஆணையத்தின் தலைவா் ஆன்டனி மெசியா்விக்ஸ் கூறுகையில், “விமானத்தின் இடதுபக்க இறக்கையில் முதல் குண்டும், மைய பகுதியில் இரண்டாவது குண்டும் வெடித்துள்ளது. ரஷிய தரப்பின் சட்டவிரோத தலையீடே இந்த சம்பவத்துக்கு காரணம். இந்த சம்பவத்தில் விமானிகளின் தவறு எதுவும் இல்லை” என்றாா்.

Next Story