பாகிஸ்தானில் அடுத்தடுத்து 6 பஸ்கள் மோதல்; 35 பேர் காயம்


பாகிஸ்தானில் அடுத்தடுத்து 6 பஸ்கள் மோதல்; 35 பேர் காயம்
x

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 6 பஸ்கள் மோதி கொண்டதில் 35 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

கராச்சி,

பாகிஸ்தான் நாட்டில் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி நகரங்களில் கனமழை பெய்து வருகிறது. ராவல்பிண்டியில் ஷாம்ஸ் அபாத் பகுதியில் 188 மி.மீ. அளவுக்கு மழை பொழிந்து உள்ளது. இஸ்லாமாபாத்தின் பொக்ரா பகுதியில் 138 மி.மீ. அளவுக்கு மழை பொழிந்து உள்ளது.

அரபி கடலில் இன்று தீவிரமடைந்து உள்ள பருவகால சூழலால், தொடர்ந்து கனமழை பெய்ய கூடும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராவல்பிண்டியில் 200 மி.மீ. அளவுக்கு மழை பொழிவு இருந்தது.

இந்த நிலையில், இஸ்லாமாபாத்-பெஷாவர் சாலையில் சென்று கொண்டிருந்த 6 பஸ்கள் புர்ஹான் பகுதியில் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கின. இதனை ஏ.ஆர்.ஒய். நியூஸ் என்ற அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இந்த விபத்தில் 35 பேர் காயமடைந்து உள்ளனர். நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் சூழலில் வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனங்களை ஓட்டும்படி தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் வாகனவழி போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

தேவையற்ற பயணங்களை மழை காலங்களில் தவிர்க்கும்படி அவர்கள் மக்களிடம் கேட்டு கொண்டு உள்ளனர். வாகனங்களின் வேகம் குறைக்கப்பட வேண்டும் என்றும், வாகனங்களுக்கு இடையேயான தூரம் அதிகம் இருக்க வேண்டும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.


Next Story