ஈரான் தாக்குதலில் இருந்து தப்பிக்க... இஸ்ரேலுக்கு நவீன சாதனம், வீரர்களை வழங்குகிறது அமெரிக்கா


ஈரான் தாக்குதலில் இருந்து தப்பிக்க... இஸ்ரேலுக்கு நவீன சாதனம், வீரர்களை வழங்குகிறது அமெரிக்கா
x

ஈரான் நாடு மற்றும் மக்களின் நலன்களை பாதுகாப்பதற்காக, எந்தவித எல்லையையும் கடந்து செல்வோம் என்று அந்நாட்டு வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி எச்சரிக்கை விடுத்து பேசினார்.

வாஷிங்டன்,

காசாவுக்கு எதிரான போரில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதற்கு, இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் உள்ளிட்ட பலர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், ஈரான் நாட்டின் தளபதி உள்ளிட்ட முக்கிய நபர்களும் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இஸ்ரேல் மீது ஈரானும் தாக்குதலை நடத்தியது. இந்த சூழலில், ஈரான் நாட்டின் ராக்கெட் தாக்குதலில் இருந்து கூட்டணி நாடான இஸ்ரேலை பாதுகாக்க உதவியாக, அதிக உயரத்தில் ராக்கெட்டுகளை அழிக்கும் திறன் பெற்ற நவீன சாதனம் ஒன்றை அமெரிக்கா வழங்கவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவின்பேரில், பாதுகாப்பு துறை மந்திரி லாய்ட் ஆஸ்டின் இதனை வழங்கினார். இதேபோன்று, இஸ்ரேல் வான் பாதுகாப்பை ஊக்குவிக்க உதவியாக அமெரிக்க ராணுவ அதிகாரிகளும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

ஏப்ரல் 13 மற்றும் அக்டோபர் 1 ஆகிய நாட்களில் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் நாடு, எதிர்பாராத தாக்குதலை நடத்திய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என பென்டகன் ஊடக செயலாளர் பேட் ரைடர் வெளியிட்ட அறிவிப்பு தெரிவிக்கின்றது.

நாட்டு மக்கள் மற்றும் நாட்டின் நலன்களை பாதுகாப்பதற்காக, எந்தவித எல்லையையும் கடந்து செல்வோம் என்று ஈரானின் வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி எச்சரிக்கை விடுத்து பேசி இருந்த நிலையில், ஈராக் நாட்டுக்கு நேற்று சென்றடைந்த அவர், அந்நாட்டு அரசு அதிகாரிகளை சந்தித்து பேசினார். இதில், இஸ்ரேல் தாக்குதல் பற்றி ஆலோசனை மேற்கொண்டார்.


Next Story