'ரஷியாவின் பங்களிப்பு இல்லாமலேயே கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதியை தொடர முடியும்' - ஜெலன்ஸ்கி


ரஷியாவின் பங்களிப்பு இல்லாமலேயே கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதியை தொடர முடியும் - ஜெலன்ஸ்கி
x

கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ரஷியா அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

கீவ்,

ரஷிய-உக்ரைன் போரில் உக்ரைனின் துறைமுகங்கள் ரஷியாவால் கைப்பற்றப்பட்டது. உலகின் பல நாடுகளுக்கு கோதுமை, பார்லி போன்ற தானியங்கள் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உள்பட பல அத்தியாவசியமான உணவு பொருட்களை உக்ரைன் ஏற்றுமதி செய்து வந்த நிலையில், இந்த போர் காரணமாக தானிய ஏற்றுமதி நின்று மிகப்பெரிய உணவு நெருக்கடி உருவாகும் அபாயம் ஏற்பட்டது.

இதை தவிர்க்க கடந்த வருடம் ஜூலை மாதம், ஐ.நா. மற்றும் துருக்கி தலையிட்டு ரஷியாவுடன் ஒரு உடன்படிக்கை செய்தது. கருங்கடல் தானிய ஒப்பந்தம் எனும் அந்த உடன்படிக்கையின்படி உக்ரைனின் 3 துறைமுகங்களிலிருந்து கப்பல்களில் தானிய ஏற்றுமதி தொடர்வதற்கு ரஷியா சம்மதித்தது. இதன்படி அந்த கப்பல்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தாது.

இந்த ஒப்பந்தம் நேற்று காலாவதியான நிலையில் இதனை மீண்டும் புதுப்பிக்க ரஷியா மறுத்து, இதிலிருந்து விலகிக் கொள்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. ரஷியாவின் இந்த நடவடிக்கையை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

"உலகின் 40 கோடி மக்கள் இந்த உணவு பொருட்களை நம்பியிருக்கின்றனர். இதனை வினியோகம் செய்வதை தடுக்க ரஷியாவிற்கு எந்த உரிமையும் இல்லை. எகிப்து, சூடான், ஏமன், வங்காளதேசம், துருக்கி, இந்தியா, இந்தோனேசியா, என அனைத்து நாடுகளையும் பாதிக்கும் ரஷியாவின் இந்த மிரட்டலுக்கு உலகம் அடி பணியக்கூடாது.

ரஷியாவின் எதேச்சதிகார முடிவை மீறி தானிய ஏற்றுமதி தொடர உலக நாடுகள் அனைத்தையும் செய்ய வேண்டும். ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தங்களுக்கு தடையற்ற உணவு பொருள் வினியோகம் கோர உரிமையுண்டு. ரஷியாவின் பங்களிப்பு இல்லாமலேயே கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதியை தொடர முடியும். எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை" என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.


Next Story