உக்ரைனுக்கு ஆயுதங்களை விற்ற பாகிஸ்தான்: நிதி பற்றாக்குறையா?


உக்ரைனுக்கு ஆயுதங்களை விற்ற பாகிஸ்தான்: நிதி பற்றாக்குறையா?
x

உக்ரைனுக்கு எந்த ஆயுதங்களை வழங்கவில்லை என்பதை இஸ்லாமாபாத் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இஸ்லாமாபாத்,

உக்ரைன் போர்க்களத்தில் உக்ரைன் - ரஷியா ஆகிய இருநாடுகளின் போராயுதங்கள், மட்டுமன்றி சர்வதேச நாடுகள் பலவற்றின் ஆயுதங்களும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கு நாடுகள் போர்த் தளவாடங்களை வாரி வழங்கி வருகின்றது. அவற்றைப் பிரயோகித்து ரஷியாவின் மோசமான தாக்குதலை உக்ரைன் திடமாக சமாளித்து வருகிறது. உக்ரைன் போரை ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இழுத்தடிக்க இதுவும் ஒரு காரணமாக உள்ளது.

இந்தநிலையில்,கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் உலக வங்கி, ஐஎம்எப் உள்ளிட்ட சர்வதேச நிதி அமைப்புகளிடம் உதவி கோரி வருகிறது. பல நாடுகளின் உதவியையும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இதற்காக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விடுக்கும் அழுத்தத்திற்கு இசைந்து வருகிறது.

அந்த வகையில், அமெரிக்காவின் நெருக்கடிக்கு பணிந்து தனது போர்த் தளவாடங்களை உக்ரைனுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து விற்பனை செய்து வந்ததாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டது. ஆனால், இந்த செய்தியை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்தது.

ஆனால், பாகிஸ்தானின் கூறிவந்த பொய் தற்போது அம்பலம் ஆகி உள்ளது. உக்ரைனுக்கு இதுவரை 364 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஆயுத தளவாடங்களை பாகிஸ்தான் விற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக வெளியான தகவலில் கூறப்படுவதாவது:

அமெரிக்காவின் தரவுகளின்படி ஆயுதங்கள் விற்பனை தொடர்பான ஒப்பந்தத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பாகிஸ்தான் அரசு கையெழுத்து போட்டது. முதல் ஒப்பந்தம் 232 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 2வது ஒப்பந்தம் 132 மில்லியன் டாலர் மதிப்புடையது. இந்த ஒப்பந்தம் கடந்த அக்., மாதத்துடன்முடிவக்கு வந்தது.

அமெரிக்காவில் உள்ள குளோபல் மிலிட்டரி நிறுவனத்துடனும், நார்த்ராப் குரும்மன் நிறுவனத்துடனும் கையெழுத்தானது.

இங்கிலாந்து ராணுவத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் மூலம் ஆயுத தளவாடங்கள் சப்ளை செய்யப்பட்டது. இதற்காக இங்கிலாந்து விமானம் ராவல்பிண்டி விமான நிலையத்திற்கு 5 முறை வந்து சென்றது. ராவல்பிண்டியில் இருந்து ஆயுத தளவாடங்களுடன் சைப்ரஸ் சென்ற விமானம், பிறகு ருமேனியா சென்றது. ருமேனியா அருகில் தான் உக்ரைன் உள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் ஸ்டேட் வங்கியானது 2022 - 23 நிதியாண்டில் பாகிஸ்தான் ஆயுத விற்பனை அதிகரித்துள்ளதாக கூறியிருந்தது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

எவ்வாறாயினும், உக்ரைனுக்கு எந்த ஆயுதங்களையும் வழங்கவில்லை என்பதை இஸ்லாமாபாத் தொடர்ந்து மறுத்து வருகிறது. சமீப காலமாக சில செய்திகள் இதே போன்ற தகவல்களுடன் வந்துள்ளன, ஆனால் இதுவரை உறுதியான ஆதாரங்கள் எதுவும் வெளிவரவில்லை.


Next Story