பாகிஸ்தானில் சீனர்கள் மீது துப்பாக்கி சூடு: ஒருவர் பலி; 2 பேர் காயம்


பாகிஸ்தானில் சீனர்கள் மீது துப்பாக்கி சூடு:  ஒருவர் பலி; 2 பேர் காயம்
x

பாகிஸ்தானில் பல் கிளினிக் ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் சீனர் ஒருவர் பலியானார். 2 பேர் காயமடைந்தனர்.



லாகூர்,


பாகிஸ்தான் நாட்டில் சீனர்கள் மீது அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்நாட்டில் வசிக்கும், பணியாற்றும் சீனர்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்துவது சமீப காலங்களாக அதிகரித்து காணப்படுகிறது.

பாகிஸ்தானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீனர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் 35க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கராச்சி நகரில் சதார் பகுதியில் பல் கிளினிக் ஒன்று உள்ளது. இந்த கிளினிக்கிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் சீனர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்களில் ஒருவர் உயிரிழந்து விட்டார். மற்ற 2 பேர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா டுவிட்டரில் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

கடந்த ஏப்ரல் இறுதியில் கராச்சி நகரில் உள்ள கராச்சி பல்கலை கழகத்தின் வளாக பகுதியில் வேன் ஒன்றின் மீது பெண் ஒருவர் நடத்திய தற்கொலை தாக்குதலில் சீன மொழி பயிற்றுவிக்கும் மையத்தின் இயக்குனர் உள்பட 3 சீனர்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த ஆண்டு கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சீனாவை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இதனை முன்னிட்டு, சீனர்கள் தங்களது பாதுகாப்பிற்காக, வேறு இடங்களுக்கு செல்வதற்கு முன் போலீசாரிடம் அதுபற்றிய விவரங்களை தெரிவித்து விட்டு செல்லும்படி இஸ்லாமாபாத் நகர அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

பாகிஸ்தானில் தொடர்ந்து சீனர்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடந்த நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பணியாளர்கள் மற்றும் தளவாடங்கள் கொண்ட வெளிநாட்டு பாதுகாப்பு பிரிவு ஒன்றை மத்திய காவல் அலுவலகத்தில் அமைக்க இஸ்லாமாபாத் நகர போலீஸ் முடிவு செய்துள்ளது.

1 More update

Next Story