அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் முத்தரப்பு மாநாட்டுக்கு பதிலடி; வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை


அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் முத்தரப்பு மாநாட்டுக்கு பதிலடி; வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
x

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை பொருட்படுத்தாமல், சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல், அண்டை நாடுகளை அச்சுறுத்துகிற வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்போடியாவில் நடந்த ஆசியான் மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தென் கொரிய அதிபருடனும், ஜப்பான் பிரதமருடனும் முத்தரப்பு உச்சி மாநாடு நடத்தி, பேசியபோது, அவர்கள் வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகளுக்கு தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். இதற்கு பதிலடி தருகிற வகையில் இன்று காலையில் வடகொரியா 'பாலிஸ்டிக்' ரக ஏவுகணை ஒன்றை ஏவி சோதித்துள்ளது.

இதுபற்றி தென்கொரிய ராணுவம் கூறும்போது, "வட கொரியா ஒரு பாலிஸ்டிக் ரக ஏவுகணையை ஏவி சோதித்துள்ளது" என தெரிவித்தது. அதே நேரத்தில் அந்த ஏவுகணை எவ்வளவு தூரம் பறந்தது, எங்கே போய் விழுந்தது என்பது உள்ளிட்ட கூடுதல் தகவல்களை வெளியிடவில்லை. இந்த ஏவுகணை சோதனைக்கு முன்னதாக வடகொரிய வெளியுறவு மந்திரி சோ சன் ஹியூ கூறும்போது, "சமீபத்தில் நடந்த அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் முத்தரப்பு உச்சி மாநாடு, வடகொரிய தீபகற்பத்தில் இன்னும் கணிக்க முடியாத பதற்றங்களை ஏற்படுத்தும்" என்று எச்சரித்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் வடகொரியா என்ன ரீதியிலான நடவடிக்கை எடுக்கும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

1 More update

Next Story