ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்


ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்
x

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஜப்பானில் பாராளுமன்ற மேல்-சபைக்கு வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (வயது 67) தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். நேற்று இரவு நாரா நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் மயங்கி விழுந்த அவரை, பாதுகாவலர்கள் அங்கிருந்து தூக்கிச் சென்றனர். உடனடியாக ஹெலிகாப்டரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மூச்சுவிடவில்லை, இதயம் செயல்படவில்லை. எனவே, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், துப்பாக்கி சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஷின்சோ அபே உயிரிழப்புக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழப்புக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

எனது அன்பான நண்பர்களில் ஒருவரான ஷின்சோ அபேயின் சோகமான மறைவு குறித்து வார்த்தைகளில் சொல்ல முடியாத அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன். அவர் ஒரு சிறந்த உலகளாவிய அரசியல்வாதி, ஒரு சிறந்த தலைவர் மற்றும் ஒரு குறிப்பிடத்தக்க நிர்வாகி. ஜப்பானையும் உலகையும் சிறந்த இடமாக மாற்ற அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

எனது அருமை நண்பர் அபே ஷின்சோ மீதான தாக்குதலால் மிகவும் வேதனையடைந்தேன். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவரது குடும்பத்தினருடனும், ஜப்பான் மக்களுடனும் உள்ளன.

அண்மையில் நான் ஜப்பானுக்கு சென்றேன். இது எங்கள் கடைசி சந்திப்பாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்த தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ஜப்பானிய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இந்தியா முழுவதும் நாளை (9 ஜூலை) அன்று ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story