ஆக்கிரமிப்பு உக்ரைனில் வாக்கெடுப்பு; ரஷியாவுக்கு 'ஜி 7' நாடுகள் கடும் கண்டனம்


ஆக்கிரமிப்பு உக்ரைனில் வாக்கெடுப்பு; ரஷியாவுக்கு ஜி 7 நாடுகள் கடும் கண்டனம்
x
தினத்தந்தி 24 Sep 2022 4:49 PM GMT (Updated: 24 Sep 2022 4:54 PM GMT)

ஆக்கிரமிப்பு உக்ரைனில் பொதுவாக்கெடுப்பு நடத்தி வருவது தொடர்பாக ரஷியாவுக்கு 'ஜி7' நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கிரீமியா படையெடுப்பு

உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தின் மீது ரஷியா கடந்த 2014-ம் ஆண்டு படையெடுத்தது. அதை தொடர்ந்து அந்த தீபகற்பத்தை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டது.

முன்னதாக, ரஷியாவுடன் இணைவது குறித்து பொதுமக்களின் கருத்தைக் கேட்பதற்காக கிரீமியா தீபகற்பத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. உக்ரைன் ஆதரவாளா்கள் அந்த வாக்கெடுப்பை புறக்கணித்தனா். எனினும், பொதுவாக்கெடுப்பில் பெரும்பாலான வாக்காளா்கள் ரஷியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்திருந்தனா். அதனை அடிப்படையாகக் கொண்டு கிரீமியா தீபகற்பத்தை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டது.

எனினும், அந்தப் பொதுவாக்கெடுப்பு போலியானது என்று அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் கூறி, கிரிமியா இணைப்பை நிராகரித்தன.

ஆக்கிரமிப்பு உக்ரைனில் வாக்கெடுப்பு

இந்த சூழலில் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி படையெடுத்தது. 7 மாதங்களாக நடந்து வரும் இந்த போரில் உக்ரைனின் பல பகுதிகள் ரஷியா வசம் வந்துள்ளன. குறிப்பாக கிழக்கு, மேற்கு உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி வைத்துள்ளன. இந்த நிலையில் கிரீமியாவைப் போலவே தற்போது கைப்பற்றப்பட்டுள்ள உக்ரைன் பகுதிகளையும் தங்களுடன் இணைத்துக்கொள்ள வழிசெய்யும் வகையில், அந்த பகுதிகளில் ரஷியா பொதுவாக்கெடுப்பு நடத்தி வருகிறது.

'ஆம்' அல்லது 'இல்லை'

அதன்படி ஏற்கனவே ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் மற்றும் தற்போது ரஷிய படைகளம் வசம் இருக்கும் கெர்சன், ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்களில் நேற்று முன்தினம் பொதுவாக்கெடுப்பு தொடங்கியது.

'ரஷியாவுடன் இணைய விருப்பமா?' என்ற கேள்விக்கு, 'ஆம்' அல்லது 'இல்லை' என்பதில் ஒன்றை பதிலாக மக்கள் தேர்வு செய்ய இந்த வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வருகிற 27-ந் தேதி வரை வாக்கெடுப்பு நடைபெறும் என தகவல்கள் கூறுகின்றன.

ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடத்தப்படும் இந்த வாக்கெடுப்பில் ரஷியாவுக்கு சாதகமாகவே முடிவுகள் அமையும் என மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.

இதனிடையே ரஷிய ஆக்கிரமிப்பு பகுதிகளில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைனின் பல்வேறு நகரங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

'ஜி7' நாடுகள் கண்டனம்

இந்த நிலையில் ஆக்கிரமிப்பு உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் இந்த சர்ச்சைக்குரிய வாக்கெடுப்பு ஒரு போலி வாக்கெடுப்பு என கூறி 'ஜி7' நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக 'ஜி7' நாடுகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ரஷியாவின் இந்த பொதுவாக்கெடுப்பு ஐ.நா. சாசனத்தை மீறுவதாகும். வாக்குகள் ரஷிய ஆதரவு அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இது ஒரு பிரசார பயிற்சியாகும். இதன் முடிவுகள் ஏற்கனவே ரஷிய அரசால் தீர்மானிக்கப்பட்டவை.

மிரட்டி வாக்கு பதிவு

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த வாய்ப்பளிப்பதாக ரஷியா கூறினாலும் உக்ரேனிய நிலத்தை ரஷியா சட்டவிரோதமாக அபகரிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே பொதுவாக்கெடுப்பு நடக்கும் ஆக்கிரமிப்பு உக்ரைன் பிராந்தியங்களில் ரஷிய ராணுவ வீரர்கள் வாக்கு பெட்டியை வீடு, வீடாக சென்று மக்களை மிரட்டி வாக்களிக்க செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story