அமெரிக்க சிறுமி உள்பட 17 பிணைக்கைதிகளை விடுவித்த ஹமாஸ், பதிலுக்கு 39 பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது இஸ்ரேல்


அமெரிக்க சிறுமி உள்பட 17 பிணைக்கைதிகளை விடுவித்த ஹமாஸ், பதிலுக்கு 39 பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது இஸ்ரேல்
x
தினத்தந்தி 28 Nov 2023 10:56 AM GMT (Updated: 28 Nov 2023 12:36 PM GMT)

கடந்த மாதம் 7-ந் தேதி தொடங்கிய இந்த போர், இரு தரப்பிலும் சுமார் 16 ஆயிரம் பேரை காவு கொண்டு இருக்கிறது.

டெல் அவிவ்,

காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினரின் திடீர் தாக்குதல் மற்றும் 240 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச்செல்லப்பட்ட சம்பவங்களால் நிலைகுலைந்த இஸ்ரேல், பின்னர் சுதாரித்துக்கொண்டு காசாவை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியது.

இதனால் இரு தரப்புக்கும் இடையே கடந்த மாதம் 7-ந் தேதி தொடங்கிய இந்த போர், இரு தரப்பிலும் சுமார் 16 ஆயிரம் பேரை காவு கொண்டு இருக்கிறது. இதில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அப்பாவி மக்களே அதிகமாக உயிர் நீத்துள்ளனர்.

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி காசாவை சின்னாபின்னமாக்கிய இஸ்ரேலின் போர் நடவடிக்கையால் அங்கு மக்கள் வாழ முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது. உணவு, குடிநீர், எரிபொருள், மின்சாரம், இணையவசதி என அத்தியாவசிய தேவைகள் எதுவும் நிறைவேற்ற முடியவில்லை.

இதனால் இஸ்ரேலின் ஆயுத தாக்குதலில் தப்பியவர்களும், பசி-பட்டினியால் உயிரிழக்கும் அவல நிலை அதிகரித்தது.

எனவே அங்கு தற்காலிக போர் நிறுத்தமாவது தேவை என உலக நாடுகள் வலியுறுத்தின. இதற்காக கத்தார், எகிப்து, அமெரிக்கா போன்ற நாடுகள் எடுத்த முயற்சியின் பலனாக 4 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் சம்மதம் தெரிவித்தது.

இந்த ஒப்பந்தபடி போர் நிறுத்தத்துக்காக 50 இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாசும், அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறைகளில் இருக்கும் 150 பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய இஸ்ரேலும் உறுதி அளித்தன. இந்த ஒப்பந்தப்படி கடந்த 24-ந் தேதி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.

இந்தநிலையில்,3-வது கட்டமாக 13 இஸ்ரேலியர்கள், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சிறுமி உள்பட நான்கு வெளிநாட்டினர் என 17 பேரை விடுவித்தது ஹமாஸ். ஹமாஸ் விடுவித்த சிறைக் கைதிகள் எகிப்தின் ரபா எல்லையில் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஹமாஸ் விடுவித்த பிணைக்கைதிகளில் இஸ்ரேலியர்கள் 13 பேரும், அமெரிக்கா,தாய்லாந்தைச் சேர்ந்த 4 பேரும் அடங்குவர். அதற்கு பதிலாக இஸ்ரேல், 33 சிறுவர்கள் உள்பட 39 பாலஸ்தீனர்களை விடுவித்தது. இஸ்ரேலால் விடுவிக்கப்பட்ட பாலஸ்தீன கைதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் போர் நிறுத்தத்தை நீட்டிக்க விரும்புவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story