இம்ரான்கானை விடுதலை செய்யக்கோரி பாகிஸ்தானில் பேரணி


இம்ரான்கானை விடுதலை செய்யக்கோரி பாகிஸ்தானில் பேரணி
x

இம்ரான்கானை விடுதலை செய்யக்கோரி பாகிஸ்தானில் பேரணி நடைபெற்றது.

லாகூர்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான். பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இவர், 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார். பின்னர், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பிரதமர் பதவியை இழந்த இம்ரான்கான் மீது ஊழல் முதல் பயங்கரவாதம் வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

குறிப்பாக, பிரதமராக இருந்த காலத்தில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பிரமுகர்களிடமிருந்து பெற்ற பரிசுகளை அரசிடம் ஒப்படைக்காமல் விற்று சொத்து சேர்த்து ஊழலில் ஈடுபட்டதாக இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி மீது குற்றச்சாட்டு எழுந்தது. பரிசுப்பொருட்களை அரசு கருவூலமான தோஷகானா என்ற துறையில் ஒப்படைக்காமல் ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதேபோல், அரசின் ரகசியங்களை கசியவிட்டதாகவும், பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வன்முறையை தூண்டியதாகவும் இம்ரான்கான் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் இம்ரான்கான் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளில் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி கைது செய்யப்பட்டு ராவல்பிண்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இம்ரான்கானை விடுதலை செய்யக்கோரி அவரது கட்சி ஆதரவாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிறையில் உள்ள இம்ரான்கானை விடுதலை செய்யக்கோரி பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சியினர் இன்று பேரணி நடத்தினர். தலைநகர் இஸ்லாமாபாத்தின் சங்ஜனி மாட்டுச்சந்தை பகுதியில் இந்த பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story