இந்தியா-ரஷியா இடையே எப்போதும் நிலையான நட்புறவு இருந்துள்ளது - மத்திய மந்திரி ஜெய்சங்கர்


இந்தியா-ரஷியா இடையே எப்போதும் நிலையான நட்புறவு இருந்துள்ளது - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
x
தினத்தந்தி 20 Feb 2024 1:44 PM GMT (Updated: 21 Feb 2024 5:55 AM GMT)

ஐரோப்பிய கண்ணோட்டத்தில் இந்தியாவால் ரஷியாவை பார்க்க முடியாது என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.

பெர்லின்,

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெர்மனி சென்றுள்ளார். அங்குள்ள செய்தி நிறுவனத்திற்கு அவர் பேட்டியளித்தபோது, உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்புக்கு மத்தியில், இந்திய அரசு ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருவதைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-

"அனைத்து நாடுகளும் தங்கள் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் பிற நாடுகளுடனான உறவை தொடர்கின்றன. சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் வரலாற்றைப் பார்த்தால், ரஷியா ஒருபோதும் எங்கள் நலன்களை புண்படுத்தியதில்லை.

ரஷ்யாவுடனான ஐரோப்பா, அமெரிக்கா, சீனா அல்லது ஜப்பான் போன்ற வல்லரசு நாடுகளின் உறவுகளில் நிறைய ஏற்றத் தாழ்வுகள் இருந்துள்ளன. ஆனால் இந்தியா-ரஷியா இடையே எப்போதும் நிலையான நட்புறவு இருந்துள்ளது. இன்று ரஷ்யாவுடனான எங்கள் உறவு, இந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது.

அதே நேரம் மற்ற நாடுகளின் நிலை வேறு விதமாக இருந்தது. சில நாடுகள் ரஷியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்துள்ளன. சீனாவுடனான எங்கள் உறவு அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் கடினமானதாக இருந்து வந்துள்ளது.

நாங்கள் சீனாவைப் பார்ப்பதைப்போல் ஐரோப்பிய நாடுகளும் பார்க்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது. அதே போல், ஐரோப்பிய நாடுகளின் கண்ணோட்டத்தில் இந்தியாவால் ரஷியாவை பார்க்க முடியாது என்பதை ஐரோப்பிய நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். உறவுகளில் உள்ள இயல்பான வேறுபாடுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

உக்ரைன்-ரஷியா போர் தொடங்கிய பிறகு, ஐரோப்பிய நாடுகள் மத்திய கிழக்கில் இருந்து எரிசக்தியை கொள்முதல் செய்யத் தொடங்கின. அதுவரை இந்தியா மத்திய கிழக்கில் அதிக அளவில் எரிபொருளை கொள்முதல் செய்து வந்த நிலையில், உக்ரைன்-ரஷியா போருக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட்டது. ஏனெனில் அவர்கள் எங்களை விட அதிக விலை கொடுத்தனர்.

அந்த சமயத்தில் இந்தியா என்ன செய்திருக்க முடியும்? எரிசக்தி அனைத்தும் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் சூழல் உருவாகும்போது, நாங்கள் இன்னும் அதிக பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் ஒரு குறிப்பிட்ட வழியில் எங்கள் எரிசக்தி சந்தையை நாங்கள் நிலைப்படுத்தினோம்."

இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்தார்.


Next Story