இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதல்: மகன்கள், பேரன்களை பறிகொடுத்த ஹமாஸ் தலைவர்


இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதல்: மகன்கள், பேரன்களை பறிகொடுத்த ஹமாஸ் தலைவர்
x

ஈத் பண்டிகையின் முதல் நாளைக் குறிக்கும் வகையில் குடும்ப கொண்டாட்டத்திற்கு சென்றபோது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது

காசா,

பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது 6 மாதங்களுக்கும் மேலாக போர் தொடுத்து வரும் இஸ்ரேல் காசாவில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் ஹமாஸ் தலைவர்களின் குடும்பத்தினரும் இலக்கு வைக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் மேற்கு காசாவில் உள்ள அல்-ஷாதி அகதிகள் முகாமுக்கு அருகே ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான இஸ்மாயில் ஹனியேவின் குடும்பத்தினர் சென்ற காரை குறிவைத்து இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியது.

இதில் இஸ்மாயில் ஹனியேவின் 3 மகன்கள் மற்றும் 4 பேரன்கள் கொல்லப்பட்டனர். ஹமாஸ் அமைப்பு இதனை உறுதி செய்துள்ளது.

இதனிடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தையில் ஹமாசின் கோரிக்கைகளை இந்த சம்பவம் மாற்றாது என்று ஹனியே தெரிவித்துள்ளார். முன்னதாக ஹனியேவின் மகன்கள் ஹமாசின் ராணுவப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது. இதனை ஹனியே முற்றிலும் மறுத்தார்.

முஸ்லீம் பண்டிகையான ஈத் பண்டிகையின் முதல் நாளைக் குறிக்கும் வகையில் குடும்ப கொண்டாட்டத்திற்கு அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது

இந்த சம்பவத்தில் ஹசீம், அமீர் மற்றும் முகம்மது ஆகிய மூன்று மகன்கள் மற்றும் மோனா, அமல், கலீத் மற்றும் ரஸான் ஆகிய நான்கு பேரன்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

61 வயதான இஸ்மாயில் ஹனியே தற்போது கத்தார் நாட்டில் உள்ளார். கத்தார் தலைநகர் தோகாவுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காயமடைந்த பாலஸ்தீனியர்களைப் பார்வையிடச் சென்றபோது தான் இந்தச் செய்தியைக் கேட்டதாக ஹனியே கூறினார்.


Next Story