போர் நிறுத்த ஒப்பந்தம்: முதல் கட்டமாக 13 பிணைக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு


போர் நிறுத்த ஒப்பந்தம்: முதல் கட்டமாக 13 பிணைக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு
x

 Photo Credit: Reuters

பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று 4 நாட்கள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.

காசா,

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த மாதம் 7-ந் தேதி போர் தொடங்கியது. 7 வாரமாக தொடர்ந்து வரும் இந்த போரில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் பறிபோயுள்ளன. காசாவில் மட்டும் இதுவரை 14,532 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 6 ஆயிரம் பேர் சிறுவர்கள், 4 ஆயிரம் பேர் பெண்கள் ஆவர். இதுதவிர சுமார் 7 ஆயிரம் பேர் கட்டிட இடிபாடுகளில் புதையுண்டு மாயமாகி உள்ளனர்.

இந்த போரில் இஸ்ரேல் தரப்பில் 1,200-க்கும் அதிகமானோர் பலியான நிலையில் சுமார் 250 பேர் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ளனர்.இதனிடையே முழுமையான போர் நிறுத்தத்துக்கான சர்வதேச நாடுகளின் அழைப்பை நிராகரித்த இஸ்ரேல் பிணைக்கைதிகளாக விடுவிப்பதற்கு வசதியாக தற்காலிகமாக போரை நிறுத்த சம்மதம் தெரிவித்தது.

இது தொடர்பாக கத்தார், எகிப்து, அமெரிக்க ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே பல வாரங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதில் ஹமாஸ் வசம் உள்ள 50 பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக காசாவில் 4 நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்ய உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி காசாவில் 4 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் அரசு நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த 4 நாட்களில் 50 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்கும் அதே வேளையில், இஸ்ரேல் சிறைகளில் இருக்கும் 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கத்தார் தெரிவித்தது.மேலும் 4 நாள் போர் நிறுத்தத்துக்கு பிறகு விடுவிக்கப்படும் ஒவ்வொரு 10 பிணைக்கைதிகளுக்கும் ஒருநாள் போர் நிறுத்தப்படும் என்றும் இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டது. அதன்படி இன்று போர் நிறுத்தம் தொடங்கிய நிலையில், முதல் கட்டமாக தாய்லாந்து நாட்டை சேர்ந்த 13 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது.


Next Story