மும்பை தாக்குதல் முக்கிய குற்றவாளி பாகிஸ்தானில் மர்மமான முறையில் உயிரிழப்பு


மும்பை தாக்குதல் முக்கிய குற்றவாளி பாகிஸ்தானில் மர்மமான முறையில் உயிரிழப்பு
x

மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

லாகூர்,

இந்தியாவின் மராட்டிய மாநிலம் மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றன. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினர்.

மும்பை தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயது என்ற பயங்கரவாதி மூளையாக செயல்பட்டுள்ளான். ஹபீஸ் சயது தற்போது பாகிஸ்தானில் அந்நாட்டு ராணுவ பாதுகாப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, மும்பை தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் மர்மமான முறையில் உயிரிழக்கும் சம்பவங்கள் சமீப காலமாக நடைபெற்று வருகின்றன. துப்பாக்கியால் சுட்டும், விஷம் கொடுத்தும் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுவரும் நிலையில் இந்தியா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் உளவுப்பிரிவு தலைவன் மர்மமான முறையில் உயிரிழந்தார். 70 வயதான பயங்கரவாதி அசிம் சீமா மும்பை தாக்குதலுக்கு திட்டம் தீட்டிய பயங்கரவாதிகளில் ஒருவன் ஆவார். பாகிஸ்தானின் பைசலாபாத் நகரில் வசித்துவந்த பயங்கரவாதி அசிம் சீமா மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பயங்கரவாதி அசிம் சீமா மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருக்குமா? என சந்தேகம் எழுந்துள்ளது.


Next Story