நிஜ்ஜார் படுகொலை; இந்தியாவை தொடர்புப்படுத்தும் கனடா, சான்றை பகிர வேண்டும்: மத்திய மந்திரி வலியுறுத்தல்


நிஜ்ஜார் படுகொலை; இந்தியாவை தொடர்புப்படுத்தும் கனடா, சான்றை பகிர வேண்டும்:  மத்திய மந்திரி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 Nov 2023 5:54 AM IST (Updated: 16 Nov 2023 5:59 AM IST)
t-max-icont-min-icon

கனடாவில் காலிஸ்தானிய பயங்கரவாதி படுகொலையில் இந்தியாவுக்கு தொடர்பு என ட்ரூடோ கூறும் குற்றச்சாட்டுகளுக்கான சான்றுகளை பகிரும்படி மத்திய மந்திரி ஜெய்சங்கர் கேட்டு கொண்டார்.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் பத்திரிகையாளர் லயனல் பார்பருடனான உரையாடலில் மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது, கனடாவில் காலிஸ்தானிய பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு உள்ளது என கனடா பிரதமர் ட்ரூடோ கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து அவர் பேசினார்.

இந்த சம்பவத்தில் இந்திய அரசுக்கு தொடர்பு உண்டா? என கேட்கப்பட்டதற்கு இல்லை என அவர் பதில் கூறினார். அப்படி கூறுவதற்கான சான்றுகளை பகிரும்படியும் அவர் அப்போது கேட்டு கொண்டார். நம்பத்தக்க சான்றுகளின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தி பேசிய அவர், இதுபற்றி கனடா வெளியுறவு மந்திரி மெலனி ஜாயுடனான சந்திப்பில், ஏதேனும் சான்றுகள் இருப்பின் அதனை பகிரும்படி கேட்டு கொண்டேன் என கூறினார்.

விசாரணை ஒன்றை பரிசீலிக்க இந்தியா தயாராக உள்ளது என சுட்டி காட்டிய அவர், ஆனால் அதுபற்றிய எந்தவித சான்றுகளும் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் உறுதிப்பட கூறினார்.

நீங்கள் குற்றச்சாட்டு கூறுவதற்கு உங்களிடம் ஒரு காரணம் இருக்கிறதென்றால், அந்த சான்றை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் என அவர் கூறினார்.

கனடாவின் சுர்ரே நகரில் வசித்து வந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவில் கடந்த ஜூன் மாதத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இந்தியாவின் மீது கனடா பிரதமர் குற்றச்சாட்டு கூறியதன் தொடர்ச்சியாக, இந்திய தூதர் வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து, பதிலடியாக கனடா தூதரை இந்தியா வெளியேற்றியது.

நிஜ்ஜார் படுகொலையில் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கு தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறும்போது, இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கும், கனடா குடிமகனின் படுகொலைக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி கனடா பாதுகாப்பு முகமைகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றன.

கனடாவில் குடிமகன் ஒருவர் படுகொலையில் அந்நியர் ஒருவரின் அல்லது வெளிநாட்டு அரசின் தொடர்பு இருப்பது என்பது ஏற்று கொள்ள முடியாதது என்று அவர் கூறினார். இந்த மாத தொடக்கத்திலும் ட்ரூடோ இந்த குற்றச்சாட்டை மீண்டும் கூறினார். எனினும், இந்தியாவுடன் ஆக்கப்பூர்வ பணியை மேற்கொள்ள கனடா விரும்புகிறது என்றும் ட்ரூடோ பின்னர் கூறினார்.

1 More update

Next Story