மே 9 வன்முறை: பாகிஸ்தானில் ரூ.250 கோடி இழப்பு; 2,138 பேர் கைது


மே 9 வன்முறை:  பாகிஸ்தானில் ரூ.250 கோடி இழப்பு; 2,138 பேர் கைது
x

பாகிஸ்தானில் மே 9-ந்தேதி முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது நிகழ்வை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் அந்நாட்டுக்கு ரூ.250 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.

லாகூர்,

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த மே 9-ந்தேதி அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரது கைது நிகழ்வை தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை பரவியது.

லாகூரில் உள்ள தளபதிகளின் இல்லம் உள்ளிட்ட ராணுவ நிலைகள் மற்றும் அரசு சொத்துகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. எண்ணற்ற அரசு அமைப்புகள் மற்றும் ராணுவ அமைப்புகள் சூறையாடப்பட்டன.

இந்த வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று அரசு நிர்வாகம் எச்சரிக்கை தெரிவித்து இருந்தது.

எனினும் வன்முறை பரவியது. இதனால், அந்நாட்டுக்கு ரூ.250 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது என பாகிஸ்தானுக்கான அரசு வழக்கறிஞர் மன்சூர் உஸ்மான் ஆவான் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து உள்ளார்.

இவற்றில், ரூ.190 கோடி மதிப்பிலான ராணுவ நிலைகளும் அடங்கும். வன்முறையாளர்களின் தாக்குதலில் ராவல்பிண்டியில் உள்ள ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் ஹம்சா முகாம், மியான்வலி பகுதியில் உள்ள விமான தளம் உள்ளிட்ட அமைப்புகளின் மீதும் தாக்குதல் நடந்து உள்ளது.

இந்த கலவரத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 2,138 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என நேற்று தெரிவிக்கப்பட்டது.

ராணுவ கோர்ட்டில் பிரிவு 3 மற்றும் 9-ன் கீழ், குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க கூடும் என இதுபற்றிய கேள்வி ஒன்றுக்கு ஆவான் பதிலளித்து உள்ளார். எனினும், பிற கோர்ட்டுகளில் இந்த தண்டனை கடுமையாக இருக்கும் என சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி உமர் பண்டியால் கூறியுள்ளார்.


Next Story