அமெரிக்காவில் துப்பாக்கிமுனையில் கடத்தி கொல்லப்பட்ட இந்திய குடும்பம்- பின்னணி என்ன?- அதிர்ச்சி தகவல்


அமெரிக்காவில் துப்பாக்கிமுனையில் கடத்தி கொல்லப்பட்ட இந்திய குடும்பம்- பின்னணி என்ன?- அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 6 Oct 2022 12:56 PM GMT (Updated: 6 Oct 2022 12:58 PM GMT)

துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்ட அமெரிக்க வாழ் இந்திய குடும்பம் நேற்று கலிபோர்னியாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

கலிபோர்னியா,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங் (36). இவர், மனைவி ஜஸ்லீன் கவுர், மற்றும் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி, உறவினர் அமன்தீப் சிங் (39), ஆகியோருடன் வசித்து வந்தார். கலிபோர்னியாவின் மெர்செட் கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கடந்த திங்கட்கிழமை இவர்கள் 4 பேரும் கடத்தப்பட்டனர்.

அந்த குடும்பம் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹோஷியார்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. குடும்பத்தைத் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் உறவினர்களால் காணவில்லை என்று காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு நடத்தினர். அப்போது அந்த குடும்பம் துப்பாக்கி முனையில் மர்ம நபரால் கடத்தப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில் நான்கு பேரையும் இறந்த நிலையில் சடலமாக போலீசார் நேற்று கண்டு பிடித்துள்ளனர். கடத்திய போது பதிவான திடுக்கிடும் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதில் நான்கு பேரையும் துப்பாக்கி முனையில் ஒருவர் கடத்துவது தெளிவாகத் தெரிகிறது.

இதை தொடர்ந்து விசாரணையை துரிதப்படுத்திய போலீசார் கொலை செய்யப்பட்ட நபர்களில் ஒருவரின் ஏடிஎம் அட்டையைப் ஒரு நபர் பயன்படுத்தியதை கண்டறிந்தனர். ஜீசஸ் மானுவல் சல்காடோ (48 வயது) என்ற அந்த நபரை போலீசார் கைது செய்ய சென்ற போது அவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். பின்னர் போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் ஜீசஸ் சல்காடோவுக்கு ஏற்கனவே குற்றப்பின்னணி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு கொள்ளை வழக்கில் சிறைக்கு சென்றுள்ள சல்காடோ பின்னர் 2015 ஆம் ஆண்டு பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தற்போது சல்காடோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரிடம் போலீசார் விசாரணையை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கொலைக்கான காரணம் தற்போது வரை தெரியவரவில்லை. இருப்பினும் பணத்திற்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீஸ் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் தற்போது அமெரிக்காவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story