எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி - போலி டுவிட்டர் கணக்குகள் எச்சரிக்கையின்றி நிரந்தரமாக நீக்கம்


எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி - போலி டுவிட்டர் கணக்குகள் எச்சரிக்கையின்றி நிரந்தரமாக நீக்கம்
x
தினத்தந்தி 7 Nov 2022 4:28 AM GMT (Updated: 2022-11-07T11:08:02+05:30)

டுவிட்டரில் பிரபலங்கள் பெயரில் போலி டுவிட்டர் கணக்குகள் பல தொடங்கப்பட்டு ஆள்மாறாட்ட நடவடிக்கைகளில் சிலர் ஈடுபடுகின்றனர்.

வாஷிங்டன்,

உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை சமீபத்தில் வாங்கினார். இதனை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனம் தொடர்பாக அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் பல்வேறு டுவிட்டர் பயனாளர்கள் 'புளூ டிக்' சரிபார்ப்பு அடையாளம் பெற மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் 650 ரூபாய்) கட்டணம் செலுத்த வேண்டும் என டுவிட்டர் நிறுவனம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த கட்டண நடைமுறை விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளது.

இதனிடையே, டுவிட்டரில் அரசியல், விளையாட்டு, சினிமா உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் கணக்கு வைத்துள்ளனர். அந்த பிரபலங்களின் பெயர்களில் டுவிட்டரில் பல்வேறு போலி கணக்குகளும் உள்ளன. இந்த போலி கணக்குகள் ஆள்மாறாட்டம் செயல்களில் ஈடுபட்டு டுவிட்டரின் நம்பகத்தன்மையை வலுவிழக்க வழிவகுக்கிறது.

அதேவேளை, இந்த போலி டுவிட்டர் கணக்குகளை கண்டுபிடித்து நீக்க டுவிட்டர் நிறுவனம் பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறது. அந்த வகையில், போலி கணக்குகள் கண்டறியப்பட்டாலும் அந்த கணக்குகளும் முதலில் எச்சரிக்கை விட்டு அதன் பின்னரே அந்த போலி கணக்கு நீக்கப்படுகிறது.

இந்நிலையில், டுவிட்டர் பயனாளர்கள் பொலி டுவிட்டர் கணக்களை உருவாகி ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டால் அந்த கணக்குகள் எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படாமல் நிரந்தரமாக நீக்கப்படும் என்று எலான் மஸ்க் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், முன்னோக்கி செல்கையில், போலி கணக்கு என்று தெளிவாக குறிப்பிடாமல் ஆள்மாறாட்டத்தில் ஈடுபடும் பயனாளர்களின் டுவிட்டர் கணக்குகள் எச்சரிக்கையின்றி நிரந்தரமாக நீக்கப்படும்.

கடந்த முறை கணக்கு நீக்கப்படுவதற்கு முன்பாக நாங்கள் எச்சரிக்கை அளித்துவந்தோம். ஆனால், தற்போது நாங்கள் அடையாள சரிபார்ப்பு நடைமுறயை விரிவுபடுத்திவிட்டதால் எச்சரிக்கைகள் எதுவும் அளிக்கப்படாது.

இது டுவிட்டரின் 'டுவிட்டர் புளூ' வசதியை பெறுவதற்கான தெளிவான நிபந்தனையாகும்' என தெரிவித்துள்ளார்.


Next Story