"நேரம் வந்துவிட்டால் எந்த சக்தியாலும் நம்மை தோற்கடிக்க முடியாது" - இம்ரான் கான்


நேரம் வந்துவிட்டால் எந்த சக்தியாலும் நம்மை தோற்கடிக்க முடியாது -  இம்ரான் கான்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 8 Feb 2024 9:40 PM GMT (Updated: 8 Feb 2024 9:40 PM GMT)

பாகிஸ்தானில் நேற்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் மொத்தம் 336 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டு உள்ளன. மீதம் உள்ள 266 தொகுதிகளுக்கும் நேரடியாக மக்கள் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

பாகிஸ்தானை பொறுத்தவரை முன்னாள் பிரதமர்களான இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

அந்தவகையில் நேற்று அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதேபோல் பஞ்சாப், சிந்து, கைபர் பக்துங்க்வா, பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்களுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது. இதற்காக நாடு முழுவதும் 90 ஆயிரத்து 582 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

அதேபோல் தேர்தல் பாதுகாப்பு பணியில் சுமார் 65 ஆயிரம் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். மேலும் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக முக்கிய இடங்களில் செல்போன் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன.

இந்தநிலையில் நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். முன்னாள் பிரதமர் இம்ரான்கானும் சிறையில் இருந்தபடியே தபால் மூலம் தனது வாக்கை செலுத்தினார்.

இந்நிலையில் பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) நிறுவனர் இம்ரான் கான் வெற்றி பெற்றதாகக் கூறி, மக்கள் தங்கள் உறுதியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதனிடையே சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் தனது எக்ஸ் வலைதளத்தில் , "மக்களின் விருப்பத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கு சாத்தியமான அனைத்து வழிகளையும் கையாண்ட போதிலும், நமது மக்கள் இன்று வாக்களிப்பதற்காக தேர்தல் மூலம் பேசினார்கள். நாம் பலமுறை கூறியது போல், "நமக்கான நேரம் வந்துவிட்டால் எந்த சக்தியாலும் நம்மை தோற்கடிக்க முடியாது. படிவம் 45ஐப் பெறுவதன் மூலம் வாக்கைப் பாதுகாப்பது இப்போது முக்கியமானது" என்று அதில் பதிவிட்டுள்ளார். மேலும் தற்போது வாக்கு எண்ணிக்கையில் இருந்து வெளிவரும் போக்குகளின் புகைப்படத்தையும் இம்ரான் கான் பகிர்ந்துள்ளார்,

'படிவம் 45' என்பது பாகிஸ்தானின் தேர்தல் ஆணையத்தின் வாக்கு எண்ணிக்கை அடிப்படையிலான அறிக்கை என அறியப்படுகிறது.



Next Story