பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் வன்முறை - அமெரிக்கா கவலை


பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் வன்முறை - அமெரிக்கா கவலை
x

பாகிஸ்தானில் நடந்த வன்முறைகள் மற்றும் கருத்துச் சுதந்திரம் மீதான தடைக்கு அமெரிக்க கண்டனம் தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

பாகிஸ்தானில் மொத்தம் 336 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 60 இடங்கள் பெண்களுக்காகவும் 10 இடங்கள் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டு உள்ளன. மீதம் உள்ள 266 தொகுதிகளுக்கு தான் தேர்தல் என்பது நடைபெற உள்ளது. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 169 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர்களான இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்கிடையே தான் குண்டுவெடிப்பு, உயிர் பலிக்கு இடையே பதற்றமான சூழலில் நாடாளுமன்ற தேர்தல் 8-ம் தேதி நடந்து முடிந்தது. இதையடுத்து ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது.

ஓட்டு எண்ணிக்கையின் துவக்கத்திலேயே இம்ரான் கான் கட்சி பல தொகுதிகளில் முன்னிலை வகிக்க தொடங்கியது. இது முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து ஓட்டு எண்ணிக்கை பணி தாமதப்படுத்தப்பட்டது. தற்போது வரை ஓட்டு எண்ணிக்கை என்பது முடிவுக்கு வரவில்லை. செல்போன் மற்றும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகாத நிலையில் சில பாகிஸ்தான் ஊடகங்களில் இம்ரான் கான் கட்சி ஆட்சியமைக்க தேவையான இடங்களை தாண்டி முன்னிலையில் இருப்பதாக கூறுகின்றன. இதனால் மீண்டும் இம்ரான் கான் கட்சியின் ஆட்சி பாகிஸ்தானில் அமையலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது ஒருபுறம் இருக்க, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் , நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மிகப்பெரிய கட்சியாக தனது கட்சி மாறியுள்ளது. இதனால் கூட்டணி ஆட்சி அமைப்பது பற்றி ஆலோசிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இருப்பினும் அவரது கட்சி எத்தனை இடங்களில் வென்றது என்பது பற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்தநிலையில் பாகிஸ்தானில் நாடாளுமன்றத்தேர்தலின் போது நடந்த சம்பவங்கள் கவலை அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவின் போது ஆங்காங்கே வெடிகுண்டு சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. மொபைல் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் எதிர்காலத் தலைமையை பாகிஸ்தானிய மக்களே தீர்மானிக்க வேண்டும். ஊடகப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை அணுகுவதற்கான கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என அமெரிக்க செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியுள்ளார். மேலும் வன்முறையிலும் கூட தேர்தல் பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் சிறப்பாக பணிபுரிந்ததற்காக நாங்கள் அவர்களைப் பாராட்டுகிறோம் என்றார்.


Next Story