கத்தார்: இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சிறை தண்டனையாக குறைப்பு


கத்தார்: இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை  சிறை தண்டனையாக குறைப்பு
x

கத்தாரில் உளவு பார்த்ததாக கூறி இந்தியர்கள் 8 பேருக்கும் கத்தார் கோர்ட்டு மரண தண்டனை விதித்தது.

தோஹா,

அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் அல் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தில் இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் பணியாற்றி வந்தனர். அவர்கள் 8 பேரும் கத்தாரில் உளவு பார்த்ததாக கூறி, அந்நாட்டு அதிகாரிகள் கடந்த ஆண்டு கைது செய்தனர். அவர்களின் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டன. வழக்கு விசாரணையின் முடிவில் இந்தியர்கள் 8 பேருக்கும் கத்தார் கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியர்களை மீட்க இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்றும், 8 பேரையும் இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய அரசு கூறியிருந்தது.

அதன்படி தீர்ப்பை எதிர்த்து இந்திய அரசு சார்பில் கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இந்த நிலையில் இதனை விசாரணை செய்த நீதிமன்றம் 8 இந்திய கடற்படை முன்னாள் வீரர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சிறை தண்டனையாக குறைத்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தீர்ப்பு குறித்த விரிவான தகவல்கள் இன்னும் தெரியவில்லை. தீர்ப்பு முழுமையாக வந்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

1 More update

Next Story