பா.ஜ.க. நிரந்தரமாக ஆட்சியில் இருந்து விட முடியாது - ராகுல் காந்தி


பா.ஜ.க. நிரந்தரமாக ஆட்சியில் இருந்து விட முடியாது - ராகுல் காந்தி
x

பா.ஜ.க. நிரந்தரமாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து விடலாம் என நினைக்கிறது, ஆனால் அது நடக்காது என்று லண்டனில் பேசிய ராகுல் காந்தி கூறினார்.

லண்டன்,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்த நாட்டின் நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் மத்தியில் நேற்று முன்தினம் பேசினார். தொடர்ந்து சாத்தம் ஹவுஸ் என்ற பெயரில் அழைக்கப்படுகிற சிந்தனையாளர் பேரவையில் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியா விடுதலை அடைந்த காலகட்டத்தில் இருந்து தற்போது வரை காங்கிரஸ் கட்சிதான் பெரும்பாலான காலகட்டத்தில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தது. பாஜ.க.வின் ஆட்சிக்கு முன்பாக நாங்கள்தான் 10 ஆண்டு காலம் ஆட்சி நடத்தினோம். ஆனால், இந்தியாவில் நாம் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விட்டோம். நாம்தான் நிரந்தரமாக ஆட்சி செய்வோம் என்று பா.ஜ.க. நம்புகிறது. ஆனால் அது நடக்காது.

இந்திய ஜனநாயகத்துக்கு தேவைப்படுகிற பழுதுபார்க்கிற பணியை எதிர்க்கட்சிகள் கூட்டாக மேற்கொள்ள முடியும்.

பெகாசஸ் மென்பொருள்

காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில் நாங்கள் நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வந்தோம். ஆரம்பத்தில் நகர்ப்புறங்களைக் கவனிக்கத் தவற விட்டோம். அது உண்மைதான்.

காங்கிரஸ் கட்சி தவிர்த்து அன்னிய ஊடகங்களும், இந்திய ஜனநாயகத்தில் தீவிரமான பிரச்சினைகள் இருப்பதை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன.

எனது செல்போனில பெகாசஸ் உளவு மென்பொருள் இருந்தது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது இது நடக்கவில்லை.

ஆர்.எஸ்.எஸ். மீது சாடல்

ஆர்.எஸ்.எஸ்.சை ஒரு ரகசிய சமூகம் என்று நீங்கள் அழைக்கலாம். அது முஸ்லிம் சகோதரத்துவத்தின் பாதையில் கட்டமைக்கப்பட்டுள்ளது, மேலும் ஜனநாயகப் போட்டியைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வருவதும், ஆட்சிக்கு வந்த பின்னர் ஜனநாயகப் போட்டியைத் தகர்ப்பதுவும்தான் அவர்களது எண்ணம்.

ஆர்.எஸ்.எஸ்., ஒரு அடிப்படைவாத, பாசிச அமைப்பாக செயல்படுகிறது. அது நாட்டின் நிறுவனங்களைக் கைப்பற்றுவதன் மூலம் இந்தியாவில் ஜனநாயகப் போட்டியின் தன்மையை மாற்றி உள்ளது. பத்திரிகைத்துறை, நீதித்துறை, நாடாளுமன்றம், தேர்தல் கமிஷன் என அனைத்து ஜனநாயக அமைப்புகளும் அழுத்தத்தின்கீழ் உள்ளன. அச்சுறுத்தலின் கீழ் இருக்கின்றன. ஒரு வழியில் அல்லது பிற வழியில் கட்டுப்படுத்தப்படுகின்றன.

சீனா உட்கார்ந்திருக்கிறது....

இந்தியாவின் 2000 ச.கி.மீ. பகுதியில் சீனா உட்கார்ந்து கொண்டு இருக்கிறது. ஆனால் எங்கள் பிரதமர் அங்கு சீன நாட்டினர் இல்லை என்கிறார்.

அமெரிக்கா உடனான இந்திய உறவை சீனா அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. அருணாசலபிரதேசம் மற்றும் லடாக்கில் உள்ள படை வீரர்களின் பின்னணியில் உள்ள அடிப்படை அம்சம், உக்ரைனில் நடந்ததைப் போன்றதுதான். இதை நான் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரிடம் தெரிவித்தேன். அவர் நான் சொன்னதை ஒப்புக்கொள்ளவில்லை. இது ஒரு வேடிக்கயைான யோசனை என அவர் நினைக்கிறார். இவ்வாறு அவர் கூ றினார்.

பா.ஜ.க. கண்டனம்

ராகுல் காந்தியின் கருத்துகளுக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி அந்தக்கட்சியின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், "ராகுல் காந்தியின் கருத்துகளை நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம். அவர் இந்திய ஜனநாயகத்தை, அரசியலை, நாடாளுமன்றத்தை, நீதித்துறை அமைப்பை, பாதுகாப்பை அன்னிய மண்ணில் இருந்து அவமதிக்கிறார். இதன்மூலம் அவர் அனைத்து நாடாளுமன்ற விதிமுறைகளையும் மறந்து விட்டார். அவர் இந்தியாவில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் தலையீட்டை விரும்புகிறார். மேலும் இந்திய விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகள் தலையிடக்கூடாது என்ற இந்தியாவின் ஒருமித்த கருத்துக்கு எதிராக செல்கிறார்" என தெரிவித்தார்.

மேலும், ராகுல் காந்தியின் பொறுப்பற்ற கருத்துகள் குறித்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியாவும் பதில் கூற வேண்டும். ராகுல் கருத்துகளை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்களா என தெரிவிக்க வேண்டும் என்றும் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

காங்கிரஸ் பதிலடி

இதையொட்டி காங்கிரஸ் ஊடக பிரிவின் தலைவர் பவன் கெரா டுவிட்டரில் வெளியிட்ட பதிலடியில், "வேலை இல்லாமல் இருக்கிற ஆளும் கட்சியின் தலைவர் ஒருவர் மீண்டும் வேலை பெற முயற்சிக்கிறார். அதைக் கவனிப்பதைக் காட்டிலும் வேடிக்கை ஒன்றும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர்களின் அறிக்கைகளைத் திரிப்பதில் முழு நேர வேலையாக இருப்பவர்கள், தங்களுக்குப் பிடித்தமான 'அப் கி பார், டிரம்ப் சர்க்கார்' என்று முழங்கிய முழக்கத்தை மறந்து விடுகிறார்கள்" என கூறி உள்ளார்.

இந்த முழக்கம், பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது ஹூஸ்டனில் பேசுகையில், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு ஆதரவாக கூறிய முழக்கம் ஆகும்.


Next Story