பாகிஸ்தான் ஏர்லைன்சுக்கு நன்றி..! கடிதம் எழுதி வைத்துவிட்டு கனடாவில் மாயமான விமான பணிப்பெண்..!


பாகிஸ்தான் ஏர்லைன்சுக்கு நன்றி..! கடிதம் எழுதி வைத்துவிட்டு கனடாவில் மாயமான விமான பணிப்பெண்..!
x

பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம்

கனடாவில் செட்டில் ஆன ஒரு பணிப்பெண், புகலிடம் கோரும் மற்ற பணிப்பெண்களுக்கு ஆலோசனை அளிப்பதாக பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து கனடா நாட்டின் டொரன்டோ நகருக்கு கடந்த 26-ம் தேதி பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் சென்றது. அந்த விமானத்தில் பணியாற்றிய மரியம் ரசா என்ற பணிப்பெண், விமானம் தரையிறங்கியதும் டொரன்டோ நகருக்குள் சென்றார். மறுநாள் விமானம் புறப்பட வேண்டிய நேரத்தில் பணிக்கு திரும்ப வேண்டிய மரியம், பணிக்கு வரவில்லை.

இதையடுத்து அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு அதிகாரிகள் சென்றனர். அங்கு அவர் இல்லை. அவர் தங்கியிருந்த அறை பூட்டப்பட்டிருந்தது. அறையை திறந்து பார்த்துபோது அங்கு, மரியம் ரசாவின் சீருடையுடன், நன்றி பிஐஏ (பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்) என்று எழுதப்பட்ட குறிப்பும் இருந்தது.

சுமார் 15 வருடங்கள் பாகிஸ்தான் ஏர்லைன்சில் பணியாற்றிய மரியம், மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்ப விருப்பமில்லாமல் கனடாவில் மாயமாகியிருக்கிறார்.

மரியம் போன்ற பல பணிப்பெண்கள் அடுத்தடுத்து கனடாவிற்குள் நுழைந்து தங்களை குறித்த தகவல்களை எவருக்கும் தெரிவிக்காமல் வாழ்கின்றனர். புகலிடம் தேடி வருவோரை ஆதரிக்கும் வகையில் கனடாவின் குடியுரிமை சட்டங்கள் உள்ளதே இதற்கு காரணம் என பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கனடாவில் மாயமான ஒரு விமான பணிப்பெண், இப்போது கனடாவில் நிரந்தரமாக குடியேறியிருப்பதாகவும், புகலிடம் கோரும் மற்ற பணிப்பெண்களுக்கு அவர் ஆலோசனை அளிப்பதாகவும் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்கு பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் தரப்பில் கனடா அதிகாரிகளுடன் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story