கொரோனா தோற்றம்... தெரிந்த விவரங்களை அனைத்து நாடுகளும் வெளியிட உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்


கொரோனா தோற்றம்... தெரிந்த விவரங்களை அனைத்து நாடுகளும் வெளியிட உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்
x

கொரோனா பெருந்தோற்று தோற்றம் பற்றி தங்களுக்கு தெரிந்த விவரங்கள் எல்லாவற்றையும் அனைத்து நாடுகளும் வெளியிட உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது.



ஜெனீவா,


உலகம் முழுவதும் பரவலாக, பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா பெருந்தொற்று முதன்முறையாக 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. எனினும், அதற்கு முன்பே, சில ஐரோப்பிய நாடுகளில் கழிவுநீர் மாதிரிகளில் கொரோனா வைரசின் இருப்பு கண்டறியப்பட்டது என கூறப்பட்டது.

எனினும், அந்த தகவல்கள் பரவலாக வெளிவராத நிலையில், பாதிப்புகளும் காணப்படாத சூழல் இருந்தது. ஒரு சில மாதங்களுக்கு பின்னர் சீனாவில், தொற்று கண்டறியப்பட்ட தருணத்தில் பல அலைகளாக பரவ தொடங்கி நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது பல தொடர் சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

உலக நாடுகளை 3 ஆண்டுகளாக பாதிப்பிற்கு உள்ளாக்கிய கொரோனா பெருந்தொற்றின் தீவிரம் பல நாடுகளில் இன்னும் குறையாமல் உள்ளது. அதன் நீண்டகால தாக்கம் மனிதர்களிடம் தொடர்ந்து காணப்படுகிறது.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. தரை, வான், ரெயில் போக்குவரத்து முடக்கத்தினால், பொருளாதார சரிவை நாடுகள் சந்தித்தன. லட்சக்கணக்கான மனித உயிரிழப்புகளையும், கோடிக்கணக்கானோருக்கு கடுமையான நீண்டகால பாதிப்புகளையும் ஏற்படுத்தி சென்றது.

ஒருபுறம், சீனாவின் உகான் நகர ஆய்வகத்தில் இந்த வைரசானது தோற்றுவிக்கப்பட்டு உள்ளது என உலக நாடுகள் சந்தேகம் எழுப்பின. அதிலும், அமெரிக்காவின் எப்.பி.ஐ. இயக்குனர் கிறிஸ்டோபர் ரே, சமீபத்தில் பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியில் கூறும்போது, கொரோனா பெருந்தொற்றின் தோற்றம் பற்றி எங்களது அமைப்பு நடத்திய புலனாய்வில், அது உகான் நகரில் உள்ள ஆற்றல்மிக்க ஆய்வகத்தில் இருந்து தோன்றியிருக்க கூடும் என கூறினார்.

இது எங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பிரசாரம் என கூறி சீனா அந்த குற்றச்சாட்டை மறுத்து உள்ளது. இதுபற்றி உலக சுகாதார அமைப்பும் தனது விசாரணையை தொடங்கியது. நேரடி விசாரணையும் நடத்தியது. எனினும், போதிய தகவல் கிடைக்க பெறாமல் உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும்போது, கொரோனா வைரசின் தோற்றம் பற்றி தங்களுக்கு என்ன விவரங்கள் தெரியுமோ, அவற்றை அனைத்து நாடுகளும் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.

அந்த தகவல்களை உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச அறிவியல் சமூகத்திடம் பகிர்ந்து கொள்வது அவசியம் ஆகிறது என டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறியுள்ளார்.

நாம் பழி போடும் விசயங்களை விட்டு, விட்டு இந்த பெருந்தொற்று எப்படி தொடங்கியது என்பது பற்றிய நமது புரிதலில் முன்னேற்றம் அடைய வேண்டும். அதனால், வருங்காலத்தில் ஏற்பட கூடிய இதுபோன்ற நோய் தொற்றுகள் மற்றும் பெருந்தொற்றுகளை தடுக்க முடிவதுடன், நாம் அதற்கு தயாராகவும், அவற்றை எதிர்கொள்ளவும் முடியும் என கூறியுள்ளார்.

கொரோனா வைரசானது எப்படி வந்தது? மற்றும் மனிதர்களிடையே எப்படி பரவ தொடங்கியது? என்பது பற்றிய அறியப்படாத விசயங்களை அறிந்து கொள்வது, வருங்கால பெருந்தொற்றுகளை தவிர்ப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என கூறியுள்ளார்.

சமீபத்தில் சீனாவின் உயரதிகாரிக்கு கடிதம் ஒன்றின் வழியே, ஒத்துழைப்பு வழங்க கேட்டு கொண்டுள்ளேன். ஏனெனில், பெருந்தொற்று எப்படி தொடங்கியது? என்பது பற்றிய தகவலில் வெளிப்படை தன்மை மற்றும் ஒத்துழைப்பு தேவையாக உள்ளது என கேட்டு கொண்டேன் என்று கூறினார். சீன தலைவர்கள் பலரிடம் இதுபற்றி எழுத்து வழியேயும், பேசியும் உள்ளேன் என அவர் கூறியுள்ளார்.

கொரோனா பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்வதில் சீனா வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து கேட்டு கொள்கிறோம். தேவையான விசாரணைகளையும் அவர்கள் மேற்கொண்டு, அதற்கான முடிவுகளை பகிர வேண்டும் என டெட்ராஸ் கூறியுள்ளார.

அதுவரை, இந்த வைரசின் தோற்றம் பற்றிய யூகங்கள் அடங்கிய அனைத்து கோப்புகளும் எங்களது முன்னால் மேஜையில் கிடப்பிலேயே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விசயம் அரசியலாக்கப்படுவது, அறிவியல் பணியை கடினப்படுத்துவதுடன், உலக பாதுகாப்பையும் குறைக்கும் என அவர் கூறியுள்ளார்.

எனினும், அமெரிக்காவில் உள்ள வேறு சில நுண்ணறிவு சமூகத்தினர், இயற்கையாகவே இந்த வைரசானது வெளிப்பட்டு உள்ளது என்றும் நம்புகின்றனர்.

இதேபோன்று, உலக சுகாதார அமைப்பின் தொற்றியியலாளர் மற்றும் தொழில் நுட்ப பிரிவின் தலைவரான மரியா வான் கெர்கோவே கூறும்போது, கூடுதல் விவரங்களை பெற ஜெனீவா நகருக்கு நான் சென்று உள்ளேன்.

இதுவரை, அமெரிக்காவின் அறிக்கைகள் எந்த அடிப்படையில் கூறப்படுகிறது என்ற விவரங்கள் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என கூறியுள்ளார். விவரங்கள் பகிரப்பட வேண்டும் என்பது தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. அது அறிவியல் ஆய்வை முன்னெடுத்து செல்ல உதவும் என அவர் கூறியுள்ளார்.


Next Story