அல்-கொய்தாவை விட மோசமானது ஹமாஸ் - அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்


அல்-கொய்தாவை விட மோசமானது ஹமாஸ் - அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்
x

இரட்டை கோபுர தாக்குதலை நடத்திய அல்-கொய்தாவை விடவும் ஹமாஸ் அமைப்பு மோசமானது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இந்த போரில் இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துள்ள அமெரிக்கா இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளது. அதோடு இஸ்ரேலுக்கு ஆயுதங்களையும் அமெரிக்கா வழங்கி வருகிறது. அமெரிக்காவின் வெளியுறவு மற்றும் ராணுவ மந்திரிகள் இருவரும் இஸ்ரேலுக்கு நேரில் சென்று அமெரிக்காவின் உறுதியான ஆதரவை வெளிப்படுத்தினர்.

27 அமெரிக்கர்கள் சாவு

இந்த நிலையில் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய ஜனாதிபதி ஜோ பைடன், அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி இரட்டை கோபுர தாக்குதலை நடத்தி 3 ஆயிரத்துக்கு அதிகமானோரை கொன்று குவித்த அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பை விட ஹமாஸ் அமைப்பு மோசமானது என சாடினார்.

இது குறித்து அவர் பேசியதாவது:-

ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலை பற்றி நாம் எவ்வளவு அதிகமாக கேள்விபடுகிறோமே, அதைவிடவும் பயங்கரமானது அங்கு நடக்கிறது. 27 அமெரிக்கர்கள் உள்பட 1,000-க்கும் அதிகமான அப்பாவி உயிர்கள் பறிபோயுள்ளது.

அல்-கொய்தாவை விடவும் மோசம்

இவர்கள் (ஹமாஸ் அமைப்பினர்) அல்-கொய்தா தூய்மையானது என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அதாவது, ஹமாஸ் அல்-கொய்தாவை விடவும் மோசமானது என்கிறேன். நான் ஆரம்பத்திலிருந்தே சொன்னது போல் ஹமாஸ் அமைப்பினர் மிகவும் தீயவர்கள். அமெரிக்கா இதில் எந்த தவறும் செய்யவில்லை. அமெரிக்கா இஸ்ரேலுடன் துணை நிற்கிறது. எப்போதும் துணை நிற்கும்.

இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக்கொள்ளவும், இந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கவும் தேவையானதை எனது நிர்வாகம் உறுதிசெய்கிறது. அதே சமயம் காசாவில் உள்ள மனிதாபிமான நெருக்கடிக்கு அவசரமாக தீர்வுகாண்பது எனது முன்னுரிமை.

இவ்வாறு ஜோ பைடன் கூறினார்.


Next Story