ஐக்கிய அரபு அமீரக பயணம்; பிரதமர் மோடியின் உணவு மெனு விவரங்கள் வெளியீடு


ஐக்கிய அரபு அமீரக பயணம்; பிரதமர் மோடியின் உணவு மெனு விவரங்கள் வெளியீடு
x

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடிக்கு வழங்கிய உணவு மெனு விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

அபுதாபி,

பிரான்ஸ் நாட்டில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அதனை முடித்து கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இன்று சென்றுள்ளார். பிரதமர் மோடி அபுதாபி நகரை சென்றடைந்ததும், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள புர்ஜ் கலிபா என்ற உயர்ந்த கட்டிடத்தில் இந்திய தேசிய கொடியின் வர்ணம் ஜொலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவர் அபுதாபி நகரில், இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜாயத் அல் நஹ்யானை சந்தித்து பேசினார்.

அவரது இந்த பயணத்தில் சி.ஓ.பி.28 எனப்படும் பருவநிலை மாற்றத்திற்கான உச்சி மாநாட்டின் தலைவர் சுல்தான் பின் அகமது அல் ஜாபரை இன்று சந்தித்து பேசினார். இந்த முறை, இந்த உச்சி மாநாட்டை ஐக்கிய அரபு அமீரகம் தலைமையேற்று நடத்துகிறது.

இந்த சந்திப்பில், பருவநிலை மாற்றத்தில் இந்தியாவின் முயற்சிகள் மற்றும் தொடக்க நடவடிக்கைகள் பற்றி பேசப்படும் என்று பிரதமர் மோடி சுட்டி காட்டினார். அந்நாட்டின் தலைமைத்துவத்திற்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்று அல் ஜாபருடனான சந்திப்பில் அவர் உறுதி கூறினார்.

தொடர்ந்து பிரதமர் மோடி கூறும்போது, உங்களது இந்த அழைப்புக்காக நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருவதற்காக, நான் எப்போதும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள பருவநிலை மாற்றத்திற்கான உச்சி மாநாட்டில் பங்கேற்க முடிவு செய்து உள்ளேன் என கூறினார்.

நம்முடைய இருதரப்பு ஒப்பந்தம் 20 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்து உள்ளது. முதன்முறையாக நாம் ரூ.6.97 லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தகம் செய்து சாதனை படைத்து உள்ளோம். விரைவில் ரூ.8.2 லட்சம் மதிப்புக்கான இலக்கை நாம் அடைவோம்.

இதுபற்றி நாம் முடிவு மேற்கொண்டால், இந்த மைல்கல்லை ஜி-20 மாநாட்டுக்கு முன்பே கடந்து விடுவோம் என்று அபுதாபியில் பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் ஜயித் அல் நஹ்யான் விருந்தளித்து உபசரித்து உள்ளார். அபுதாபியில் உள்ள காசர்-அல்-வதன் என்ற அதிபருக்கான அரண்மனையில் இந்து விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த உணவு மெனு அடங்கிய விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், திருவிழா போன்ற காலங்களில் வழங்கப்படும் ஹரீஸ் எனப்படும் கோதுமையில் செய்த டிஷ் மற்றும் பேரீச்சம் பழத்தில் செய்த சாலட் மற்றும் உள்ளூரில் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை கொண்டு தயாரான சாலட், மசாலா சாஸில் பொறிக்கப்பட்ட காய்கறிகள் ஆகியன முக்கிய உணவுக்கு முன் வழங்கப்படும் முன் உணவுகளாக பரிமாறப்பட்டன.

அதன்பின் முக்கிய உணவாக, கருப்பு உளுந்து மற்றும் கோதுமையில் தயாரான உணவில் காலிபிளவர் மற்றும் கேரட் தந்தூரி ஆகியவை சேர்த்து பரிமாறப்பட்டன.

அதன்பின் உள்ளூரில் பருவகாலங்களில் கிடைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பழங்களை கொண்டு செய்யப்பட்ட பாயாசமும் விருந்தில் பரிமாறப்பட்டது.

பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட அனைத்து உணவுகளும் சைவ உணவு மற்றும் எண்ணெயில் தயாரிக்கப்பட்டவை. அவற்றில் பால் அல்லது முட்டை பொருட்கள் எதுவும் இல்லை என்று அதற்கான மெனு அட்டையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


Next Story