அமெரிக்கா: வெற்றி பேரணியில் துப்பாக்கி சூடு; ஒருவர் பலி


அமெரிக்கா:  வெற்றி பேரணியில் துப்பாக்கி சூடு; ஒருவர் பலி
x
தினத்தந்தி 15 Feb 2024 3:29 AM GMT (Updated: 15 Feb 2024 3:40 AM GMT)

வெற்றி கொண்டாட்டத்திற்கான பேரணி, யூனியன் ஸ்டேசன் பகுதியில் வந்தபோது, திடீரென கூட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது.

மிசவுரி,

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த ரக்பி விளையாட்டுக்கான சூப்பர் பவுல் சாம்பியன்ஸ் போட்டியில், கன்சாஸ் சிட்டி அணி பட்டம் வென்றது. இந்த வெற்றியை கொண்டாடுவது என ரசிகர்கள் முடிவு செய்தனர்.

இதற்காக மிசவுரி மாகாணத்தில் கன்சாஸ் நகரில் உள்ள தெருக்களில் அவர்கள் ஒரு பேரணியாக சென்றனர். இதனை தொடர்ந்து, 600 போலீசார் வரை பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

இந்த பேரணியில், ஆண்கள், பெண்கள் என ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அப்போது, யூனியன் ஸ்டேசன் பகுதியில் பேரணி வந்தபோது, திடீரென கூட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. இதனால், பேரணியில் திரண்டிருந்த பெண்கள் உள்ளிட்ட பலரும் அலறியடித்து ஓடினர்.

இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். 21 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

கென்சாஸ் கவர்னர் லாரா கெல்லி போலீசாரால் பாதுகாப்பாக வேறிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், கன்சாஸ் நகர போலீசார் கூறும் அறிவுரைகளை மக்கள் பின்பற்றும்படியும், அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.


Next Story