சமமான சுதந்திரம் என்ற இலக்கை நோக்கி செயல்படுவதை நாங்கள் கைவிட மாட்டோம் - ஜோ பைடன்


சமமான சுதந்திரம் என்ற இலக்கை நோக்கி செயல்படுவதை நாங்கள் கைவிட மாட்டோம் - ஜோ பைடன்
x

கோப்புப்படம்

இஸ்ரேலியர்களும், பாலஸ்தீனியர்களும் சமமான சுதந்திரத்துடன் வாழ முடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த மாதம் 7-ந் தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய கொடூர தாக்குதலில் 1,200 பேர் பலியாகினர். மேலும் பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 250 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளாக பிடித்து காசாவுக்கு கொண்டு சென்றனர்.

இதனைத்தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்தது. ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக ஒழிப்பதாக சூளுரைத்த இஸ்ரேல் காசாவை முற்றுகையிட்டு தரை, கடல், வான் என மும்முனை தாக்குதல்களை நடத்தியது. இதில் காசாவில் 14 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் போரின் விளைவால் காசாவில் மோசமான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டு பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த சூழலில் கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் எடுத்த முயற்சியின் பலனாக 4 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் சம்மதம் தெரிவித்தது. இந்த நிலையில் காசாவில் நேற்று 3-வது நாளாக போர் நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டது. 3 நாட்களாக தொடரும் போர் நிறுத்தத்தால் காசா முழுவதும் அமைதியான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் இஸ்ரேலியர்களும், பாலஸ்தீனியர்களும் சமமான சுதந்திரத்துடன் வாழ முடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களின் நீண்ட கால பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க ஒரே வழி இரு நாடுகளின் தீர்வு. இஸ்ரேலியர்களும், பாலஸ்தீனியர்களும் சமமான சுதந்திரம் மற்றும் கண்ணியத்துடன் வாழ முடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த இலக்கை நோக்கி செயல்படுவதை நாங்கள் கைவிட மாட்டோம்" என்று அதில் ஜோ பைடன் பதிவிட்டுள்ளார்.


Next Story