காசாவில் பணயக்கைதியாக சிறைபிடிக்கப்பட்ட 4 வயது அமெரிக்க சிறுமி பாதுகாப்பாக உள்ளார் - ஜோ பைடன் தகவல்


காசாவில் பணயக்கைதியாக சிறைபிடிக்கப்பட்ட 4 வயது அமெரிக்க சிறுமி பாதுகாப்பாக உள்ளார் - ஜோ பைடன் தகவல்
x

Image Courtacy: AFP

தினத்தந்தி 26 Nov 2023 10:48 PM GMT (Updated: 27 Nov 2023 1:45 AM GMT)

இஸ்ரேல்-ஹமாஸ் சண்டையின் இடைநிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தினார்.

வாஷிங்டன்,

இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த மாதம் 7-ந் தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய கொடூர தாக்குதலில் 1,200 பேர் பலியாகினர். மேலும் பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 250 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளாக பிடித்து காசாவுக்கு கொண்டு சென்றனர்.

இதனைத்தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்தது. ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக ஒழிப்பதாக சூளுரைத்த இஸ்ரேல் காசாவை முற்றுகையிட்டு தரை, கடல், வான் என மும்முனை தாக்குதல்களை நடத்தியது. இதில் காசாவில் 14 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் போரின் விளைவால் காசாவில் மோசமான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டு பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த சூழலில் கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் எடுத்த முயற்சியின் பலனாக 4 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் சம்மதம் தெரிவித்தது.

தற்காலிக போர் நிறுத்தம் 23-ந் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு நாள் தள்ளிபோனது. அதன்படி வெள்ளிக்கிழமை காலை போர் நிறுத்தம் தொடங்கியது. முதல் நாளில் 13 பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். மேலும் தாய்லாந்து நாட்டினர் 10 பேர் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரர் ஒருவர் காசாவில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

நேற்று முன்தினம் 2-வது நாளாக போர் நிறுத்தம் கடைபிடிக்கப்பட்ட சூழலில் பணய கைதிகளை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இஸ்ரேலால் அனுமதிக்கப்பட்ட மனிதாபிமான உதவிகள் வாக்குறுதியளிக்கப்பட்டதை விட குறைவாக இருப்பதாக குற்றம் சாட்டிய ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளை விடுவிக்க தயக்கம் காட்டினர்.

இது 4 நாள் போர் நிறுத்தத்தின் 2-வது நாளில் ஒரு பதற்றமான சூழலை உருவாக்கியது. எனினும் சில மணி நேரத்துக்குள் இந்த இழுபறி முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து, 13 பணய கைதிகளையும், தாய்லாந்து நாட்டினர் 4 பேரையும் ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். அதே போல் ஹமாஸ் விடுவித்த 13 பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் சிறைகளில் இருந்து 39 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட பாலஸ்தீனர்கள் அனைவரும் பஸ் மூலம் பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதே போல் ஹமாஸ் விடுவித்த 13 பணய கைதிகள் இஸ்ரேல் அழைத்து செல்லப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் காசாவில் நேற்று 3-வது நாளாக போர் நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டது. 3 நாட்களாக தொடரும் போர் நிறுத்தத்தால் காசா முழுவதும் அமைதியான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி 3-வது கட்டமாக 13 பணய கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்தது. விடுவிக்கப்படும் பணய கைதிகளின் பெயர் விவரங்களை ஹமாஸ் முன்கூட்டியே தங்களிடம் வழங்கியதாக இஸ்ரேல் தெரிவித்தது. அதேபோல் 13 பணய கைதிகளுக்கு ஈடாக சிறைகளில் இருந்து 39 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என இஸ்ரேல் தெரிவித்ததது.

இதனிடையே ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதியான அகமது அல் கந்தூர் போரில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. எனினும் அவர் எங்கு, எப்போது கொல்லப்பட்டார் என்பதை ஹமாஸ் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் காசாவில் பணயக்கைதியாக சிறைபிடிக்கப்பட்ட நான்கு வயது அமெரிக்க சிறுமி இஸ்ரேலில் பாதுகாப்பாக உள்ளார் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார். மேலும் பணயக்கைதிகளை விடுவிக்க அனுமதிக்கும் வகையில் இஸ்ரேல்-ஹமாஸ் சண்டையின் இடைநிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் ஜோ பைடன் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், "பணய கைதியான அபிகாயில் எடன், அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலின் போது தனது பெற்றோர் ஹமாஸ் போராளிகளால் கொல்லப்பட்டதை நேரில் பார்த்ததாகவும், அன்றிலிருந்து பணய கைதியாக வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்ததாக ஜோ பைடன் கூறினார்.


Next Story