ஆயுசு கெட்டி; ஜப்பானில் இடிபாடுகளில் இருந்து 5 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட 90-வயது மூதாட்டி


ஆயுசு கெட்டி; ஜப்பானில் இடிபாடுகளில்  இருந்து 5 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட 90-வயது மூதாட்டி
x
தினத்தந்தி 7 Jan 2024 3:29 PM IST (Updated: 7 Jan 2024 5:00 PM IST)
t-max-icont-min-icon

ஜப்பானில் கடந்த 1 ஆம்தேதி அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 100- ஐ கடந்துள்ளது.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான ஜப்பான், அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரலைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் கடந்த 1 ஆம் தேதியும் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு ஒட்டுமொத்த நாட்டையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. ரிக்டர் அளவில் 7.6 புள்ளிகள் வரை நிலநடுக்கங்கள் பதிவாகின.

இதனால் ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள இஷிகாவா, நிகாட்டா, டயோமா, யமஹடா உள்ளிட்ட மாகாணங்கள் மொத்தமாக குலுங்கின. இதைப்போல தலைநகர் டோக்கியோ வரை நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நீடித்து வருகிறது. நிலநடுக்கத்தால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 100 ஐ தாண்டியுள்ளது.

இந்த நிலையில் நேற்று மீட்புப் பணியாளர்கள் இஷிவாகா மாகாணம் சுஸு நகரில் இரண்டு மாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த 90 வயது மூதாட்டியை உயிருடன் மீட்டனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்கிடையே உணவின்றி ஐந்து நாட்களுக்கும் மேலாக அந்த மூதாட்டி உயிருடன் இருந்தது மீட்புபடையினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இடிபாடுகளுக்கு இடையே கொட்டும் பனியில் சிக்கியவர்கள் 72 மணி நேரத்திற்குப் பிறகு உயிர் பிழைப்பது மிகவும் கடினம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், 124 மணி நேரத்திற்குப் பிறகு 90 வயது மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டுள்ளது அங்கிருந்தவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

1 More update

Next Story