ஹமாஸ் அமைப்புக்கு பல ஆண்டுகளாக ஈரான் ஆதரவு; அமெரிக்கா குற்றச்சாட்டு


ஹமாஸ் அமைப்புக்கு பல ஆண்டுகளாக ஈரான் ஆதரவு; அமெரிக்கா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 24 Oct 2023 2:42 AM GMT (Updated: 24 Oct 2023 8:27 AM GMT)

ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு பல ஆண்டுகளாக ஈரான் ஆதரவளித்து வருகிறது என அமெரிக்கா குற்றச்சாட்டு கூறியுள்ளது.

வாஷிங்டன்,

இஸ்ரேல் மீது கடந்த 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என சிக்கியவர்களை கடுமையாக அடித்து, தாக்கி வன்முறையில் ஈடுபட்டது. இதில், 260 பேர் கொல்லப்பட்டனர்.

210 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. 18-வது நாளாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேலுக்கு போர் கப்பல் உள்பட ஆயுத உதவிகள், நிதி உதவிகளை அமெரிக்கா செய்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயல்திட்ட தொடர்புகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பை செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்போது, ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, ஈரான் பல ஆண்டுகளாக ஆதரவளித்து வருகிறது. இரு தசாப்தங்களாக இந்த ஆதரவு உள்ளது. ஈரான் இன்றி ஹமாஸ் அமைப்பினரால் இயங்கவோ அல்லது தொடர்ந்து செயல்படவோ முடியாது.

ஆனால், கடந்த 7-ந்தேதி நடந்த சம்பவத்தில் அவர்கள் பங்கு கொண்டுள்ளனர் என்றோ அல்லது அதற்கு உத்தரவிட்டனர் என்றோ கூறுவதற்கு, ஒரு குறிப்பிட்ட உளவு தகவலை நாங்கள் வைத்திருக்கிறோம் என்றோ நான் கூற வரவில்லை.

ஆனால், உலகில் கெட்ட நபர்களுடன் சேர்ந்து கெட்ட விசயங்களை ஈரான் செய்து வருகிறது என்ற உண்மையில் இருந்து, ஒருவரும் விலகி சென்று விட முடியாது. அதில் யாரும் சந்தேகம் கொள்ள முடியாது என்று கிர்பை கூறியுள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்கி வருவதற்கு எதிராக சில தினங்களுக்கு முன்பு, ஈரான் எச்சரிக்கை விடுத்து இருந்தது. அது நிலைமையை இன்னும் சிக்கலுக்கு உள்ளாக்கும் என்று ஈரானின் உயர்மட்ட ராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் முகமது பாகேரி கூறிய தகவலை அந்நாட்டின் ஐ.ஆர்.என்.ஏ. செய்தி நிறுவனம் தெரிவித்தது.

எனினும், பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட தேவையான எல்லா விசயங்களும் இஸ்ரேலிடம் உள்ளது என்பது உறுதி செய்யப்பட வேண்டியது அமெரிக்காவின் உச்சபட்ச முன்னுரிமைக்கான விசயம் என்று கிர்பை கூறியுள்ளார்.


Next Story