திக்கற்றவர்களை அரவணைக்கிற இறைவன்


திக்கற்றவர்களை அரவணைக்கிற  இறைவன்
x
தினத்தந்தி 19 Jan 2018 12:45 AM GMT (Updated: 18 Jan 2018 10:15 AM GMT)

இறைமகன் இயேசு தன் கருத்துக்களை வெளிப்படுத்த எளிமையான முறையில் மக்கள் புரிந்து கொள்ள பல உவமைகளை கூறியிருக்கின்றார். அதில் திராட்சைத் தோட்ட வேலையாட்கள் உவமையும் ஒன்று. விண்ணரசை ஒப்பிட்டு இந்நிகழ்ச்சியை சொல்கிறார்.

நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாட்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே செல்கிறார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாட்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்புகிறார். ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே செல்கிற பொழுது சந்தைவெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம் ‘‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்திற்கு போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்’’ என்கிறார். அவர் களும் செல்கிறார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும், பிற்பகல் மூன்று மணிக்கும், ஐந்து மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்கிறார். மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளர்களிடம், ‘‘வேலையாட்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர் வரை அவர்களுக்குரிய கூலி கொடும்’’ என்றார். உடனே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக்கொள்கின்றனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாக கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு தெனாரியம் வீதம் தான் கொடுக்கப்பட்டது. அவர்கள் அதைப் பெற்றுக்கொண்ட போது நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, ‘‘கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப்பளுவையும், கடும் வெயிலையும் தாங்கி எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே’’ என்றார்கள்.

நிலக்கிழார் ‘‘தோழரே நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம்’’ என்றார்.

இவ்வுவமை யூதர்களின் அன்றாட வாழ்வில் நிகழும் ஒரு வழக்கத்தினை அடிப்படையாகக் கொண்டது. செப்டம்பர் மாத இறுதியில் திராட்சை பழங்கள் அறுவடைக்கு தயாராகி விடும். பின் தொடர்ந்து, மழைக்காலம் என்பதால் அறுவடை செய்யாவிடில் திராட்சை பழங்கள் மழையினால் சீரழிந்துவிடும். இதனால் இவ்வேளைகளில் அறுவடைப் பணி மிக விரைவாக நடைபெறும். எந்த ஒரு தொழிலாளியும் ஏற்றுக்கொள்ளப்படுவார். குறிப்பாக ஒருவர் ஒருமணிநேரம் பணி செய்ய முன்வந்தாலும் அவரையும் ஏற்றுக்கொள்வார்கள். ஒரு நாள் பணி செய்கின்றவருக்கு ஒரு தெனாரியம் ஊதியம் என்பது பொதுவானது.

இங்கே முதலாவது ஒப்பந்தம் அடிப்படையில் வேலையாட்களை பணி அமர்த்துகிறார். பின் மீண்டும் மீண்டும் நிலக்கிழார் கடைத்தெருவிற்கு சென்று, மாலை ஐந்து மணி வரை மூன்று, நான்கு பாகமாக வேலையாட்களை அழைத்து வருகின்றார். கடைசியாக வேலைக்கு அழைக்கப்பட்டவர்கள் நம்பிக்கையற்ற, நிச்சயமில்லாத வாழ்வு வாழ்ந்தனர். முன் வந்தவர்கள் ஒரு குழுவில் நிரந்தரமாக இடம்பிடித்திருந்தனர். ஆனால் கடைசியாக வந்தவர்களோ, எந்தக் குழுவிலும் இணைந்திருக்கவில்லை. இவர் களுக்கு வேலைவாய்ப்பு என்பது கருணை அடிப்படையில்தான் கிடைத்தது. அதனால் அவர்களது வாழ்வு எப்பொழுது அரை பட்டினியிலேயே கழிந்தது. ஒருநாள் இவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் வீட்டில் குழந்தைகள் அன்று பட்டினி தான்.

இவ்வுவமையில், முந்தினோர் எனப்படுவோர் யூதர்கள், தாங்களே உயர்ந்தவர், சிறந்தவர், முதன்மையானவர் என்ற எண்ணம் அவர்களிடம் காணப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அமர்த்தப்படுவோராகிய புற இனத்தார் ஆனாலும் சரி, ஆயக்காரர், கைவிடப்பட்ட பெண்கள், பிள்ளைகள் போன்றோரும் சரி, எவ்விதத்திலும் இறுதிக்கணிப்பில் குறைந்து மதிப்பிடப்போவதில்லை. யாவருக்கும் கிடைக்கப்போவது இறையருளால் நாம் பெறப்போகும் நிலை வாழ்வு தான். இறுதியில் பணியமர்த்தப்படுவோருக்கு ஏதோ கொஞ்சம் கிடைக்கும் என்ற எண்ணம், அது போதாதே என்ன செய்வது என்ற கவலை வாட்டியிருக்கும். எனவே தான் நிலக்கிழார் அவர்தம் கவலையை முந்திப் போக்குகிறார். கிறிஸ்து கையாளும் இந்த புரட்சிகரமான கணிப்பு நம்முடைய சமுதாய அமைப்புகளையும், நம்முடைய பொருளாதார நியாயங்களையும் பாதிக்குமானால் இவ்வுலகமே மோட்சமாகிவிடும்.

திக்கற்றவர்களை தாங்குவதும், அவர்களுக்கு உரிய நீதி கிடைக்கப்பெறச் செய்வதும், அவர்களோடு இணைந்து, சந்தோ‌ஷப்படுவதும், அவர்களுடைய தேவைகளை நிறைவேற்ற உதவுவதும் தான் தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும், மாசற்றதுமான சமய வாழ்வாகும்.

‘‘பிரார்த்தனை செய்யுங்கள் கடவுள் அருகே நீங்கள் போகலாம். பிரார்த்தனை செய்ய முடியவில்லையா? அதற்குப் பதிலாக சேவை செய்யுங்கள். கடவுளே உங்கள் அருகே வருவார்’’ என்கிறார், அன்னை தெரசா. இந்த உலகத்தில் யாரும் அனாதை இல்லை, ஏனெனில் திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும், கணவனை இழந்தோரின் காப்பாளராகவும் இருப்பவர் தூயகத்தில் உறையும் கடவுள் (திருப்பாடல்கள் 68:5).

–அருட்பணி ம.பென்னியமின்.

Next Story