ஆன்மிகம்

உறவின்றி அமையாது உலகு + "||" + The world is not a relationship

உறவின்றி அமையாது உலகு

உறவின்றி அமையாது உலகு
விவிலியத்தின் தொடக்கம் முதல் கடைசி வரை, இறைவன் எப்படி தனது மக்களோடு நெருங்கிய அன்பு உறவு கொள்ள ஆசைப்படுகிறார் என்பதே விளக்கப்படுகிறது.
மக்கள் விலகும் போது கலங்கும் இறைவனையும், நெருங்கும் போது நெகிழும் இறைவனையும், வேண்டும் போது கசியும் இறைவனையும் நாம் இறை வார்த்தைகளில் உயிர்ப்புடன் வாசிக்கிறோம்.

இறைவன் உறவுகளின் தேவன். அதனால் தான் மண்ணில் மனிதர்களைப் படைக்கும் போதும் அவர் உறவுகளையே முதன்மைப்படுத்தினார்.


ஆதாம் ஏவாள் எனும் முதல் உறவு இறைவனின் திருவுளம். அவர்களை ஏதேனில் வாழ வைத்து அவர்களோடு தானும் வாழ்ந்து மகிழ்ந்தவர் இறைவன்.

உறவுகள் இறுக்கமாய் இருக்க வேண்டும் என விரும்புபவர் இறைவன். கிறிஸ்தவ வாழ்க்கையின் கட்டளைகளைச் சுருக்கி இரண்டு கட்டளைகளாகக் கொடுத்த இறைவன் உறவுகளை மட்டுமே மையப்படுத்தினார். ‘இறைவனை நேசி, சக மனிதனை நேசி’ என்பதே அவரது கட்டளைகளின் மையம்.

இன்றைய டிஜிடல் யுகம் நம்மை வெளிச்சத் திரை களுக்குள் இருட்டு வாழ்க்கை வாழ அழைக்கிறது. ரெயில் சிநேகங்களும், குட்டிச் சுவர் உரையாடல்களும், டீக்கடை பெஞ்சுகளும் கூட இன்று டிஜிடல் வலைகளுக்குள் வலு விழந்து கிடக்கின்றன என்பது தான் நிஜம்.

இயேசு நம்மை அழைக்கிறார், உறவுகளால் நெருக்கமாய்க் கட்டப்பட்ட ஒரு வாழ்க்கைக்காய் அழைக்கிறார். கடல்நீரில் கலந்திருக்கும் உப்பைப் போல உறவுகள் இறுக்கமாய் இருக்க வேண்டும் என விரும்புகிறார்.

1. தன்னோடான உறவு

தன்னோடான உறவு என்பது சுயநலம் அல்ல. “தன்னைப் போல பிறரையும் நேசி” என சொன்ன இயேசுவின் போதனை, தன்னை அன்பு செய்ய வேண்டும் என்பதையே மறைமுகமாக சொல்கிறது. நான் என்பது இறைவனின் பிம்பம். என்னை நான் நேசிப்பது இறைவனின் படைப்பை நேசிப்பதன் அடையாளம்.

நமது உடல் என்பது இறைவன் வாழும் ஆலயம் என்கிறது விவிலியம். இறைவனின் ஆலயமான இந்த உடலை நாம் அன்பு செய்ய வேண்டும். தூய்மையான உறவுடன் அதைப் பேண வேண்டும்.

2. உறவினரோடான உறவு


நமது குடும்பங்களை எடுத்துப் பார்த்தால், ஒட்டும் இல்லாமல் உறவும் இல்லாமல் ஏதோ ஒரு உறவினர் இருப்பார். ‘செத்தாலும் அவன் வீட்டு வாசப்படியை மிதிக்க மாட்டேன்’ என்றோ, ‘என் சாவுக்கு கூட அவன் வரக்கூடாது’ என்றோ முறுக்கித் திரியும் ஒரு ஈகோ எல்லா குடும்பங்களிலும் ஒளிந்திருக்கும்.

விவிலியமோ உறவினரோடு உறவு பாராட்டச் சொல்கிறது. அப்படிச் செய்யாவிடில் அது இறைவனுக்கே எதிரானது என்கிறது. “தம் உறவினரை, சிறப்பாகத் தம் வீட்டாரை ஆதரியாதோர் விசுவாசத்தை மறுதலிப்பவராவர்” (1 திமோத்தேயு 5:8)

3. கணவன் மனைவி உறவு

ஒரு காலத்தில் ‘வெட்டி விட்டிருவேன்’ என்று கணவன் மிரட்டுவது குடும்பத்தின் உச்ச கட்ட மிரட்டலாய் இருக்கும். இந்த பதினைந்து ஆண்டுகளில் மணமுறிவு 350 சதவீதம் அதிகரித்திருப்பதாய் ஒரு புள்ளி விவரம் சொல்கிறது.

இறைவன் ஆணும் பெண்ணுமாய் மனிதனைப் படைத்து, அவர்களை குடும்பம் எனும் பந்தத்தில் இணைத்தபோது, பிரிவைப் பற்றி அவர் யோசிக்கவே இல்லை. “திருமணமான ஆண்களே, கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள்” (எபேசியர் 5:24) என குடும்ப உறவு குறித்து விவிலியம் அறிவுறுத்துகிறது.

4. பிறரோடான உறவு

சக மனிதர் மீதான கரிசனை இன்று நீர்த்துப் போய்க்கொண்டிருக்கிறது. சாலையில் அடிபட்டுக் கிடப்பவனைக் கவனிப்பதை விட போட்டோ எடுத்து ‘ஸ்டேட்டஸ்’ போடும் கூட்டம் தான் அதிகரித்திருக்கிறது.

இறுதித் தீர்வை நாளின் போது கடவுள் கேட்கும் கேள்விகள் எல்லாமே சக மனிதனோடு நாம் என்ன உறவு கொண்டிருந்தோம் என்பதன் அடிப்படையில் தான் அமைந்திருக்கின்றன. “உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” எனும் இறைவனின் கட்டளை ஒன்றே போதும் அதைப் புரிந்து கொள்ள

5. திருச்சபையோடான உறவு

திருச்சபை என்பது இறைவனால் ஏற்படுத்தப்பட்டது. இறைவனால் நடத்தப்படுவது. இறைவனால் கண்காணிக்கப்படுவது. திருச்சபை மீதான நமது அணுகுமுறை புனிதம் கலந்து இருக்க வேண்டியது அவசியமாகிறது.

கொடியாம் இறைவனின் கிளைகள் நாம். அவரில் இணைந் திருக்கும் போது தான் பலன் கொடுக்கிறோம். கிளைகள் ஒன்றுக்கொன்று சண்டையிடுவதில்லை. அப்படி சண்டையிட்டால் அது கொடியை பாதிக்கும்.

தன்னை, தன்னைச் சார்ந்தோரை, தன்னை ஈன்றோரை, தன்னோடு வாழ்வோரை, தன் திருச்சபையினரை, தன் சமூகத்தினரை என அனைவரையும் நேசிக்கும் நிலை வேண்டும். அனைவரோடும் இறைவனின் அன்பைப் பகிரும் வாழ்க்கை அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அப்போது தான் உறவின் மேன்மை, இறையின் தன்மையாய் வெளிப்படும்.

- சேவியர், சென்னை. 

அதிகம் வாசிக்கப்பட்டவை