நற்பாக்கியங்களைத்தரும் ‘இக்திகாப்’


நற்பாக்கியங்களைத்தரும் ‘இக்திகாப்’
x
தினத்தந்தி 24 Oct 2018 11:06 AM GMT (Updated: 24 Oct 2018 11:06 AM GMT)

“(மக்காவில் இப்ராகிம் கட்டிய ‘கஅபா’ என்னும்) வீட்டை மனிதர்கள் ஒதுங்கும் இடமாகவும், (அவர்களுக்கு) பாதுகாப்பு அளிக்கக் கூடியதாகவும் நாம் ஆக்கியிருக்கின்றோம்.

(அதில்) இப்ராகிம் நின்ற இடத்தை (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தொழும் இடமாக வைத்துக்கொள்ளுங்கள். ‘(ஹஜ்ஜு செய்ய அங்கு வந்து) அதை வலம் சுற்றுபவர்களுக்கும், தியானம் புரிய (அதில்) தங்குபவர்களுக்கும், குனிந்து சிரம் பணி(ந்து அதில் தொழு) பவர்களுக்கும் என்னுடைய அந்த வீட்டை சுத்தமானதாக ஆக்கி வையுங்கள்’ என்று இப்ராகீமிடத்திலும் இஸ்மாயீலிடத்திலும் நாம் வாக்குறுதி வாங்கியிருக்கின்றோம்”. (திருக்குர்ஆன் 2:125)

உலகம் தோன்றிய காலம் முதல், ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களை நேர்வழிப்படுத்த இறைவன் தன் தூதர்களை அனுப்பி வழிகாட்டினான். ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் தனித்தனியாக நபிகள் அனுப்பப்பட்டனர். அவர்களும் ஏக இறைக்கொள்கைகளை எடுத்துக் கூறினார்கள். ஆனால் மக்கள் அதை ஏற்க மறுத்து இறைவனுக்கு இணை வைத்து அவனது அருளை புறக்கணித்தனர். இதனால் அந்த மக்கள் அழிவைச்சந்தித்தார்கள்.

பல கால கட்டங்களில் உலகம் பகுதி பகுதியாகத்தான் அழிவுபட்டது. சில கூட்டத்தாரை காற்று, இடி, மின்னல், பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் இறைவன் தண்டித்தான். லூத் நபியின் கூட்டத்தை மட்டும் அந்த ஊரையே தலை கீழாக்கி புரட்டி அழித்தான். நூஹ் நபிகள் கூட்டத்தினரைத் தண்டிக்க எண்ணிய அல்லாஹ் பெரும் வெள்ளத்தை அனுப்பினான். இந்த வெள்ளத்தில் உலகமே அழிந்து போனது. இறைவன் கட்டளைப்படி நூஹ் நபியின் கப்பலில் பயணம் செய்தவர்கள் மட்டும் தப்பினார்கள். இந்தக்கப்பல் ஜுதி மலையில் தங்கியது. அந்த கப்பலில் இருந்த உயிரினங்களை கொண்டு உலகம் மீண்டும் புத்துயிர் பெற்றது.

அந்த வெள்ளத்தில் இறை இல்லமான ‘கஅபா’ சேதம் அடைந்தது. காலங்கள் மாறி இப்ராகிம் நபிகள் தோன்றிய பின்னர் இறைவன் மீண்டும் கஅபாவை புதுப்பித்து கட்ட நினைத்தான். இதனை இப்ராகிம் நபிகளுக்கு உள்ளுணர்வால் உணர்த்தி, அந்த பாலைவனத்தில் தேடச்செய்து அதன் அஸ்திவாரங்களை அறிவித்துக்கொடுத்தான். பின்னர் அல்லாஹ்வின் கட்டளைப்படி அங்கே இப்ராகிம் நபிகள் ‘கஅபா’ என்ற இல்லத்தை அமைத்தார்கள்.

இறை இல்லம் கட்டி முடிக்கப்பட்டதன் பின்னர் தான் மேலே குறிப்பிட்ட இந்த இறைவசனம் இறக்கியது. இறை இல்லத்தில் தங்கி தியானம் செய்வதையே கண்மணி நாயகம் (ஸல்) ‘இக்திகாப்’ என்ற அமலாக நமக்கு அமைத்து தந்தார்கள்.

ஒரு மனிதன் தன் உலக வாழ்வின் தொடர்புகள் அத்தனையும் துறந்து தனிமையை நாடி, அதுவும் இறை இல்லத்திற்கு வந்து தங்கி இருந்து இறைவனோடு நேரடி தொடர்பில் ஈடுபடுவதே இக்திகாப் எனப்படும். இது பரவலாக ரமலான் மாதத்தின் கடைசி பத்து இரவுகளில் உலகெங்கிலும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

ரமலான் மாதத்தில் கடைசி பத்து இரவுகளில் இறை இல்லங்களில் வந்து தங்கி அமல் செய்வதற்கு சுன்னத்தான இக்திகாப் என்றும்; ரமலானில் கடைசி பத்தில் பத்து இரவுகளுக்கு குறைவாக கடைபிடிப்பதற்கு வாஜிப் அல்லது நபில் இக்திகாப் என்றும்; ரமலான் தவிர்த்து மற்றைய நாட்களில் இருப்பதற்கு முஸ்தகபான இக்திகாப் என்றும் அழைக்கப்படுகின்றது.

இந்த மூன்று நிலைகளையும் தவிர்த்து எப்போதெல்லாம் பள்ளிவாசலுக்கு தொழுகையை நிறைவேற்றுவதற்காக வருகிறோமோ, அப்போதெல்லாம் இக்திகாப் நிய்யத்தோடு பள்ளிவாசல் வந்தால், அந்த குறுகிய கால அளவும் கூட இக்திகாப் என்ற சுன்னத்தை நிறைவேற்றியதாக கொள்ளப்படும். அதன் நன்மையையும் பெற்றுத்தரும்.

இக்திகாப் இருக்க நாடியவர்கள் ரமலான் மாதத்தின் 21-ம் பிறை பிறப்பதற்கு முன்பாக, குறிப்பாக அஸர் என்ற மாலை நேரத் தொழுகைக்காக வரும்போதே பள்ளிவாசலில் வந்து தங்கி விட வேண்டும். ஈது பிறை கண்டு பெருநாள் அறிவிக்கப்பட்ட பின்னரே வீட்டிற்கு திரும்ப வேண்டும். இடைப்பட்ட இந்த கால அளவில் பள்ளிவாசலில் தங்கி இருந்து நல்லறங்கள், குர்ஆன் ஒதுதல், துஆ செய்தல், இறை வழிபாடுகளில் ஈடுபடுதல், தியானங்கள் போன்றவற்றில் தன்னை ஆட்படுத்தி கொள்ள வேண்டும்.

பள்ளிவாசல் வந்ததும் தனக்கென தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் தன் உடமைகளை வைத்து விட்டு இரண்டு ரக்காத் இக்திகாப் நிய்யத் தொழுைக தொழ வேண்டும். அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட எல்லையில் மட்டுேம தங்கி இருக்க வேண்டும். இயற்கை உபாதைகள் தவிர்த்து ேவறு எந்த காரணங்களுக் காகவும் பள்ளிவாசலைவிட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். உலக தொடர்புகள் அத்தனையும் தவிர்த்து தனிமையிலேேய இறைவனை வணங்கி வழிபட வேண்டும்.

இப்படி இக்திகாபின் சட்ட வரைமுறைகளைப் பற்றி குறிப்பிட்டு வருகையில் இன்னுமொரு இடத்தில், “நோன்புகளை நோற்று முழுமையாக்குங்கள். ஆயினும் நீங்கள் வணங்குவதற்காக மஸ்ஜிதுகளில் தங்கி இக்திகாப் இருக்கும் போது உங்கள் மனைவியர் களுடன் கூடாதீர்கள். இது அல்லாஹ்வுடைய திட்டமான சட்ட வரம்புகளாகும். ஆதலால் அவ்வரம்புகளை மீற நெருங்காதீர்கள்” (திருக்குர்ஆன் 2:187) என்று இறைவன் தெளிவாக குறிப்பிடுகின்றான்.

இந்த வசனத்தின் மூலம் இரண்டு விஷயங்களை நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். இக்திகாப் என்ற அமலை பள்ளி வாசல்களில் சென்று தங்கி செயல்படுத்த வேண்டும். நோன்பிருக்க வேண்டும். உலக தொடர்புகளை அறுத்து தனிைமயிலேயே தங்கி இருக்க வேண்டும். அந்தக்காலத்தில் மனைவியர்களுடன் சேர்ந்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அதோடு முத்தாய்ப்பாக இந்த வசனத்தின் கடைசியில், இவையனைத்தும் அல்லாஹ் விதித்த சட்ட வரம்புகள் ஆகும். அதனை எந்த நிலையிலும் மீறுவதற்கு முயற்சி செய்யாதீர்கள் என்று கடுமையாக எச்சரிக்கையும் செய்யப்பட்டுள்ளது.

அல்லாஹ் நோன்பைப்பற்றி விவரிக்கும் போது, ‘அதன் கடைசி பத்து இரவுகளில் ஏதாவது ஒன்றில் தான் ஆயிரம் மாதங்களை விட கண்ணியம் நிறைந்த ஒரு சிறந்த இரவு உள்ளது’ என்று குறிப்பிடுகின்றான்.

‘(நபியே!) அந்தக் கண்ணியமுள்ள இரவின் மகிமையை நீங்கள் அறிவீர்களா?. கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக்க மேலானதாகும். அதில் மலக்குகளும், ஜிப்ரயீலும், தங்கள் இறைவனின் கட்டளையின் பேரில் (நடைபெற வேண்டிய) எல்லா காரியங்களுடன் இறங்குகின்றனர். ஈடேற்றம் உண்டாகுக! (அவ்விரவின் இச்சிறப்பு) விடியற்காலை உதயமாகும் வரை (நீடிக்கிறது)’. (திருக்குர்ஆன் 97:2-5)

எனவே, இக்திகாப் இருப்பவர்கள் மொத்த பத்து நாட் களுமே இறை தியானத்தில் ஈடுபட்டிருப்பதால் நிச்சயமாக அந்த கண்ணியமிகுந்த ‘லைலத்துல் கத்ர்’ என்ற இரவைப் பெற்றுக்கொள்ளும் பாக்கியம் அவர்களுக்கு கிடைக்கும்.

கண்மணி நாயகம் தமது 40-ம் வயதில் ஹீரா குகையில் சென்று தனிமையில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டு இறைவனை துதி செய்ததால் ‘திருக்குர் ஆன்’ என்னும் அற்புத பொக்கிஷத்தைப் பெற்று தந்தார்கள். அல்லாஹ், மூஸா நபிகளை தூர்ஸினாய் மலையடிவாரம் வரவழைத்து 40 இரவுகள் தனிமையில் தங்கச் செய்து தவ்ராத் வேதத்தை அருளினான். இவ்வாறு வேதங்களைப் பெற்று தந்த சிறந்த அமல் இக்திகாப்.

இக்திகாப் இருக்க நம்மில் எத்தனைபேர் முயன்றாலும் அல்லாஹ் சிலரையே தேர்ந்தெடுக்கின்றான். அதன் மூலம் நமக்கு அளப்பறிய அருள் வளங்களைத் தருவதற்கு இறைவன் நாடு கிறான் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அப்படிப்பட்ட மேலான நற்பாக்கியங்களை நம் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தந்து அருள்பாலிப்பானாக, ஆமின்.

(தொடரும்)

Next Story