பெண்ணிற்காக இறங்கிய இறை வசனம்


பெண்ணிற்காக இறங்கிய இறை வசனம்
x
தினத்தந்தி 8 Nov 2018 10:17 AM GMT (Updated: 8 Nov 2018 10:17 AM GMT)

“நபியே! எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து அவரைப் பற்றி அல்லாஹ்விடமும் முறையிட்டாளோ, அவளுடைய முறையீட்டை அல்லாஹ் நிச்சயமாக கேட்டுக் கொண்டான்.

 அதைப்பற்றி உங்கள் இருவரின் தர்க்க வாதத்தையும் அல்லாஹ் செவியுற்றான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவன். ஒவ்வொருவரின் செயலையும் உற்று நோக்குபவன் ஆவான்” (திருக்குர்ஆன் 58:1)

பண்டைய அரபு சமுதாயத்தினர், அறியாமையில் இருளில் மூழ்கி பண்பாட்டை இழந்தவர்களாக வாழ்ந்தனர். குறிப்பாக பெண்களை அடிமைகளாகவும், போதைப் பொருளாகவுமே பயன்படுத்தி வந்தனர்.

அந்த காலகட்டத்தில் தான், அறியாமை இருளை அகற்ற வந்த அருந்தவ செல்வமாய் அண்ணல் நபிகள் பிறந்தார். இஸ்லாமின் ஏகத்துவத்தை எடுத்துக்கூறியதோடு, உறவுகள், பக்கத்து வீட்டார் உரிமைகள், பெண்களின் பாதுகாப்பு குறித்தும் மக்களுக்கு அறிவுரை கூறி வந்தார்கள்.

குறிப்பாக, பெண்களின் அடிமைத்தளையை நீக்கி, அவர்களுக்கான பேச்சுரிமை, கல்வி கற்றல் உரிமை, ஆணுக்கு இணையான சொத்துரிமை போன்ற உரிமைகளைப் பெற்று தருவதில் நபிகள் நாயகம் ஈடுபட்டார்கள். இதில், இஸ்லாமிய தத்துவம் சொல்லும் பெண்களுக்கான உரிமைகள் அனைத்தையும் எடுத்துச் சொல்லி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

அன்றைய காலகட்டத்தில் ஒரு விசித்திரமான பழக்கம் அரபு ஆண்களிடம் இருந்தது. அதாவது, தன் மனைவியை பிடிக்கவில்லை என்றாலோ, அல்லது ஏதாவது கோபதாபங்கள் இருந்தாலோ, மனைவியை தண்டிப்பதற்காக, அவளை தாம்பத்ய உறவிலிருந்து விலக்கி வைத்து விடுவதுண்டு. இந்த செயலுக்கு ‘ஸிஹார்’ என்ற பெயர் வழக்கில் இருந்து வந்தது. ‘ஸிஹார்’ என்றால் அரபியில் ‘முதுகு’ என்று பெயர்.

கணவன் தன் மனைவியை நோக்கி ‘நீ என் தாயின் முதுகை ஒத்திருக்கிறாய்’ என்று சொல்லி விட்டால் அது அவள் தாயின் அந்தஸ்த்தை அடைந்து விடுவதாக ஆகி விடும்.

இந்த முறையைப் பயன்படுத்தி, பலர் தங்கள் மனைவியரை ‘தலாக்’ சொல்லி விடுவிக்காமல், ‘தாய்’ என்று வார்த்தையைச் சொல்லி அந்தப்பெண்ணோடு வாழ்ந்தும் வாழாமல் அவர்கள் வாழ்வை கேள்விக்குறியாக்கி வந்தனர்.

இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில் தான், நபிகளை சந்தித்து ஒரு பெண் தன் கணவனைப் பற்றி முறையிட்டாள். “என் கணவர் என்ன காரணத்திற்காகவோ என்னை அவரின் தாய் போன்றிருக்கிறேன் என்று சொல்லி, என்னை அவரின் தாம்பத்ய வாழ்விலிருந்து விலக்கி வைத்துள்ளார். கேட்டால் இது போன்ற ‘ஸிஹார்’ என்ற முறை காலம் காலமாய் இருந்து வரும் ஒரு கொள்கை என்பதாகச் சொல்கிறார்.”

“நபியே! இது ஆணாதிக்கம் அல்லவா? பெண்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி அல்லவா? என்னைப் பிடிக்கவில்லை என்றால், என்னை மணவிலக்கு செய்து விலக்கி விட்டு என் வாழ்வில் இடைஞ்சல் செய்யாமல் விட்டிருக்கலாம். அதை விடுத்து நான் வாழ்ந்தும் வாழ முடியாத ஒரு நிலையை உருவாக்கி என்னை தண்டிப்பது எந்த வகை நியாயம்? எனக்கு ஒரு நல்ல முடிவைச் சொல்லுங்கள். என் கணவருக்கு புத்தி சொல்லுங்கள்?” என்று வேண்டி நின்றாள்.

இந்த புகாரை மிக உன்னிப்பாக கேட்ட கண்மணி நாயகம் கண்மூடி சிறிது நேரம் மவுனமாக இருந்தார்கள். இது காலம் காலமாய் பெண்ணினத்திற்கு ஏற்பட்டிருக்கும் அநீதி. இதற்கான நீதி அல்லாஹ்விடம் இருந்து வந்தால் நன்றாக இருக்குமே? என்று எண்ணம் கொண்டவர்களாக பிரார்த்தனை செய்தபடி இருந்தார்கள்.

அல்லாஹ்வின் வசனங்கள் வஹியாய் மளமளவென இறங்கியது. ‘நபியே! உங்களிடம் தர்க்கம் செய்த அந்த பெண்மணியின் வாதத்தை அல்லாஹ் கேட்டுக்கொண்டான். தன் மனைவியை தாய் என்று சொல்லி ‘ஸிஹார்’ முறையை பயன்படுத்தும் அத்தனை ஆண்களும் பெண்களுக்கு அநீதி இழைக்கிறார்கள், அந்த முறையை ரத்து செய்கிறேன்’ என்று சொல்லியவாறு வஹியை அறிவித்தான்.

“உங்களின் எவரேனும் தன் மனைவிகளில் எவளையும் தன் தாயென்று கூறி விடுவதனால், அவள் அவர்களுடைய உண்மைத் தாயாகி விட மாட்டாள். அவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தான் உண்மைத் தாய் ஆவார்கள். இதற்கு மாறாக எவளையும் எவரும் தாயென்று கூறினால், கூறுகின்ற அவர்கள் நிச்சயமாகத் தகாததும் பொய்யானதுமான ஒரு வார்த்தையையே கூறுகின்றனர். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன். பிழை பொறுப்பவன் ஆவான். ஆகவே இத்தகைய குற்றம் செய்தவர்கள் அல்லாஹ்விடம் மன்னிப்பு கோரவும்” (திருக்குர்ஆன் 58:2)

எனவே எவரேனும் தன் மனைவியை தாயென்று சொல்லி, அந்த வார்த்தையின் மூலம் பெண்களை வாழ்விழந்தவர்களாகச் செய்வதை குற்றம் என்றும் அதற்கு அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முதல் கட்டளையைப் பிறப்பிக்கின்றான்.

தொடர்ந்து... “ஆகவே எவரேனும் தங்கள் மனைவிகளைத் தன் தாய்க்கு ஒப்பிட்டு கூறிய பின்னர் அவர்களிடம் திரும்ப சேர்ந்து கொள்ள விரும்பினால் அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தொடுவதற்கு முன்பாகவே இவ்வாறு ஒப்பிட்டு கூறிய குற்றத்திற்குப் பரிகாரமாக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இதை அல்லாஹ் உங்களுக்கு உபதேசம் செய்கிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன் ஆவான்” (திருக்குர்ஆன் 58:3) என்று குறிப்பிடுகிறான்.

ஆனால் இந்த முறை பலதரப்பட்ட மக்களால் பின்பற்ற பட்டு வந்ததால் அடிமையை விடுதலை செய்யும் அளவு சக்தி பெறாத மக்கள் இரண்டு மாதங்கள் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும் என்றும், அல்லது அதற்கும் சக்தி பெறாதவர்கள் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டான். தண்டனை கடுமையாக இருக்கும் போது குற்றங்கள் குறைய வாய்ப்பு உண்டு தானே. அதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

“விடுதலை செய்யக்கூடிய அடிமையை எவரேனும் பெற்றிருக்கா விடில், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தொடுவதற்கு முன்னதாகவே அவன் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும். இவ்வாறு நோன்பு நோற்க சக்தி பெறாதவன் அறுபது ஏழைகளுக்கு மத்திய தரமான உணவளிக்க வேண்டும். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள் என்பதற்காக இந்த கட்டளையை இவ்வாறு இலேசாக்கி வைத்தான். இவை அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகள் ஆகும். இதை மீறுபவர்களுக்கு துன்புறுத்தும் வேதனைஉண்டு” (திருக்குர்ஆன் 58:4).

இந்த வசனங்கள் இறங்கிய அடுத்த கணம் அந்த பெண்மணியை அழைத்து நபிகள் நாயகம் நன்மாராயம் சொன்னார்கன். “உனது உண்மையான கோரிக்கையை அல்லாஹ் ஏற்று, உன் பொருட்டால் அத்தனை பெண்களுக்கும் நீதி செலுத்தினான்” என்றார்கள். அந்த பெண்மணியும் அகமகிழ்ந்து போனார்.

பிற்காலத்தில் உமர் இப்னு கத்தாப் (ரலி) தனது ஆட்சி காலத்தில் ஒரு வயது முதிர்ந்த மூதாட்டியிடம் அதிக நேரம் பேசிக்கொண்டிருந்தார். அந்த வழியாகச் சென்ற ஒருவர் அவரிடம் “கலிபாவிற்கு எத்தனையோ வேலைகள் இருக்க இந்த மூதாட்டியிடம் ஏன் இத்தனை நேரம் வீணே காலம் தாழ்த்துகிறீர்கள்” என்று வினவினார்.

உடனே உமர் கத்தாப் (ரலி) அவர்கள், “இவர் யார் என்று தெரிந்தால் இப்படி கேட்டிருக்க மாட்டீர்கள். இந்த பெண்மணியின் பொருட்டால் ‘ஸிஹார்’ என்ற கொடுமையை நீக்கி அதற்குப் பரிகாரமான சட்டங்களையும் இறைவன் இறைமறையில் அருளினான்” என்றார்கள்.

அநீதியை எதிர்த்து பெண்களும் குரல் எழுப்பலாம் என்றும், அது அல்லாஹ்வின் சிம்மாசனம் வரை சென்று நீதி கிடைக்கச் செய்யும் என்பதையும் இந்த நிகழ்வின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மு.முஹம்மது யூசுப், உடன்குடி.


(தொடரும்)

Next Story