விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்


விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்
x
தினத்தந்தி 24 Nov 2018 10:46 AM GMT (Updated: 24 Nov 2018 10:46 AM GMT)

பிரான்ஸ் நாட்டை ஆண்ட மாவீரன் நெப்போலியன், எப்போதும் எல்லா சூழ்நிலைகளிலும் விழிப்பாக செயல்படக்கூடியவர்.

எந்த வேலையையும் குறித்த நேரத்தில் முடிக்கவேண்டும் என்ற ஆர்வம் உடையவர். அவர் ஒருபோதும் காலம் தவறியதில்லை. ஆனால் அவருடைய தளபதிகளோ, குறிப்பிட்ட நேரத்தில் வருவதை அசட்டையாய் எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் நெப்போலியன் தன் படை வீரர்களுக்கும், தளபதிகளுக்கும் பெரிய விருந்து ஏற்பாடு செய்து அன்போடு அழைப்பு விடுத்தார். விருந்து நேரம் வந்தது, தளபதிகள் வழக்கம்போலவே சற்று தாமதமாகவே வந்தார்கள். ஆனால் நெப்போலியனோ தனியாக உட்கார்ந்து, விருந்தை சாப்பிட்டு முடித்துவிட்டார்.

அவர் கை கழுவும்போது, ஒவ்வொரு தளபதியாக வந்தார்கள். நெப்போலியன் அவர்களைப் பார்த்து, ‘என் அருமை தளபதிகளே, உணவு நேரம் முடிந்துவிட்டது, இப்போது நம் கடமைக்காக புறப்படும் நேரம் தொடங்கிவிட்டது, இனி ஒரு நிமிடம் கூட தாமதம் செய்ய முடியாது, வாருங்கள் போவோம்’ என்று அழைத்துச் சென்றார்.

மலைத்து நின்ற தளபதிகள் தலைவனின் வார்த்தையை தட்டவும் முடியாமல், பின்வாங்கவும் முடியாமல் வேறுவழியின்றி பசியோடு யுத்தத்திற்கு சென்றார்கள்.

அன்றுமுதல் அவர்கள் எப்போதும் எல்லா சூழ்நிலைகளிலும் விழிப்பாகவே செயல்பட வேண்டும் என்ற பாடத்தை நெப்போலியனிடமிருந்து கற்றுக்கொண்டார்கள்.

தன் வாழ்வின் மிகுந்த சோதனையான சூழ்நிலையில் இயேசு தன் சீடர்களிடம் ‘சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்’ என்கிறார்.

கெத்சமனித் தோட்டத்தில் இயேசு

ஆண்டவர் இயேசு தன் சீடர்களுடன் கெத்சமனி என்னும் இடத்திற்கு வந்தார். அவர், ‘நான் அங்கே போய், இறைவனிடம் வேண்டும்வரை இங்கே அமர்ந்திருங்கள்’ என்று அவர்களிடம் கூறிவிட்டு, தம் நெருங்கிய சீடர்களான பேதுரு, யோவான், யாக்கோபு ஆகிய மூன்று பேரை தம்முடன் கூட்டிச்சென்றார்.

அப்போது அவர் துயரமும், மிகுந்த மனக்கலக்கமும் அடைந்தவராய் அவர்களிடம், ‘எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது. நீங்கள் என்னோடு விழித்திருங்கள்’ என்று கூறினார்.

பிறகு அவர்களையும் விட்டு, சிறிது தூரம் தள்ளிச் சென்று முகங்குப்புற விழுந்து, ‘என் தந்தையே, முடிந்தால்; இத்துன்பக்கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப்படியே நிகழட்டும்’ என்று கூறி இறைவனிடம் வேண்டினார்.

உறங்கிக் கொண்டிருந்த சீடர்கள்

மன்றாட்டுக்கு பின் இயேசு தம் சீடர்களிடம் வந்தார். அவர்கள் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவினிடம், ‘ஒரு மணி நேரம் கூட என்னோடு விழித்திருக்க வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வமுடையது தான், ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்குட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்’ என்றார்.

மீண்டும் சென்று, ‘என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக்கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும்’ என்று இரண்டாம் முறையாக இறைவனிடம் வேண்டினார்.

அவர் திரும்பவும் வந்தபோது, சீடர்கள் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. அவர் அவர்களை விட்டு மறுபடியும் சென்று, இதே வார்த்தைகளைச் சொல்லி மூன்றாம் முறையாக இறைவனிடம் வேண்டினார்.

பிறகு அவர் சீடர்களிடம் வந்து, ‘இன்னும் ஓய்வெடுக்கிறீர்களா?, பாருங்கள், நேரம் நெருங்கி வந்து விட்டது. மானிட மகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படுகிறார், எழுந்திருங்கள், போவோம். இதோ, என்னைக் காட்டிக்கொடுப்பவன் நெருங்கி வந்துவிட்டான்’ என்று கூறினார்.

விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்

ஆண்டவர் இயேசு, ‘எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது’ என்று சொல்லி மன்றாடத் தொடங்குகிறார். தனது வாழ்வின் துயர் மிகுந்த தருணத்தில், அவரது வியர்வை பெரும் ரத்தத் துளிகளைப் போலத் தரையில் விழுமளவிற்கு உருக்கமாய் இறைவனிடம் வேண்டினார். தம் சீடர்களும் சோதனையினிமித்தம் மிகுந்த துயர் கொள்ளாதபடிக்கு, ‘விழித்திருந்து இறைவனை வேண்டுங்கள்’ என்கிறார்.

சோதனைகளும், வேதனைகளும், அதன் நிமித்தம் உருவாகும் ஆழ்துயரங்களும், நம் வாழ்வில் தவிர்க்க முடியாதவைகளே. இவைகள் மனித வாழ்வில் குறுக்கிட்டு, அதன் ஓட்டத்தையும், நோக்கங்களையும் முறியடிக்கும் சக்தி வாய்ந்த ஓர் எதிரி.

ஆண்டவர் இயேசு முற்றிலும் பாவமற்றவர், தந்தையாம் கடவுளுடன் நெருங்கிய உறவில் இருந்தவர். எனினும், அவருக்கும் சோதனைகள் வந்தது. இதனால், ஆண்டவரின் மனித வாழ்வு முற்றிலும் மனித வாழ்வாகவே இருந்தது என்பதை உறுதிப்படுத்துகிறது. இறைமைந்தன் மனிதனானார் என்பதால், அவருடைய மனித வாழ்வின் எந்தத் துயரங்களும் எளிதாக்கப்படவில்லை.

ஆண்டவரின் வேதனையான சூழ்நிலையில் அவருடன் விழித்திருக்கவும் இயலாத நித்திரை மயக்கம் சீடர்களை ஆட்கொண்டது. சோதனைகள் நம் எதிரில் நிற்கும்போது, நாம் நம்முடைய நினைவுகளைத் தூக்கத்தாலோ, வேறுவகை தவறான சிந்தனைகளாலோ, மது, போதை போன்றவைகளின் உதவியை நாடியோ அவைகளினின்று தப்பியோடப் பார்க்கிறோம். இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது தான் சீடர்களின் நித்திரை. நாமும் அப்படியிராமல், ‘விழித்திருந்து இறைவனிடம் வேண்டுவோம். விவேகத்துடன் ஆழ்துயர்களை வெல்வோம்’.

அருட்பணி.ம.பென்னியமின், தூய பவுல் லுத்தரன் ஆலயம், உண்ணாமலைக்கடை.

Next Story