இறைவனிடம் பொறுப்புச் சாட்டுவது


இறைவனிடம் பொறுப்புச் சாட்டுவது
x
தினத்தந்தி 28 May 2019 8:36 AM GMT (Updated: 28 May 2019 8:36 AM GMT)

இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘இறைவனிடம் பொறுப்பு சாட்டுவது’ குறித்த தகவல்களை காண்போம்.

ஒரு முஸ்லிம் தமது அனைத்து காரியங்களையும் இறைவனிடம் ஒப்படைப்பது, இறைவனை சார்ந்தே இருப்பது, தமக்கு நலன்களை சேர்ப்பவனும், கெடுதிகளை தடுப்பவனும் அவனே என்று உள்ளத்தில் உறுதி கொள்வது, தமது பொறுப்புகளை இறைவனின் கட்டுப்பாட்டில் விட்டு விடுவது, அனைத்து விஷயங்களிலும் இறைவனே பாதுகாவலன் எனும் அசைக்க முடியாத நம்பிக்கை கொள்வது, போன்றவை இறை நம்பிக்கையின் ஓர் அங்கம்.

இறைவனிடம் பொறுப்புச் சாட்டுவதில் பலவிதமான நிலைகள் உண்டு. அதில் முதன்மையான, உயர்வான நிலை- இறைவனை மட்டுமே சார்ந்திருப்பது. மற்றவரின் உதவியையோ, காரணிகளையோ நாடாமல் இருப்பது.

இதற்கு உதாரண புருஷர்களாக நபி இப்ராகிம் (அலை) மற்றும் அவரின் மகன் இஸ்மாயீல் (அலை), இவர்களின் வழித்தோன்றல்களில் இருந்து வந்த இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) ஆகியோரை குறிப்பிடலாம்.

“இப்ராகிம் (அலை) அவர்கள் நெருப்பில் எறியப்பட்ட போது, ‘எனக்கு இறைவனே போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்’ என்பதே அவர்களின் கடைசி வார்த்தையாக இருந்தது”. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), புகாரி)

நெருப்பில் எறியப்பட்ட இப்ராகிம் (அலை) அவர்களை அதன் வேதனையில் இருந்து விடுவிக்க, வானவர் ஜிப்ரீல் (அலை) வந்து உதவிசெய்ய நாடியபோது ‘இறைவனுடைய உதவி மட்டுமே போதும், தங்களின் உதவி தேவையில்லை’ என்று இப்ராகிம் (அலை) மறுத்துவிட்டார்கள்.

அவர் இந்த விஷயத்தை இறைவனிடமே விட்டு, அவனையே பாதுகாவலனாகவும் ஆக்கிவிட்டார்கள். விளைவு, நெருப்பு அது தனது சுயதன்மையை இழந்து இதமாக மாறிப்போனது. இதுபற்றி திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

‘நீங்கள் (ஏதேனும்) செய்வதாக இருந்தால் இவரைத் தீயில் பொசுக்கி உங்கள் கடவுள் களுக்கு உதவுங்கள்’ என்றனர்.

‘நெருப்பே, இப்ராகிமின் மீது இதமான குளிராக ஆகிவிடு’ என்று கூறினோம்.

‘அவர்கள் இப்ராகிமுக்குத் தீங்கு செய்ய நாடினார்கள். ஆனால், நாம் அவர்களையே தோல்வியுறச் செய்தோம்’. (திருக்குர்ஆன் 21:68-70)

இப்ராகிம் (அலை) அவர்கள் தமது பிஞ்சுக் குழந்தை இஸ்மாயீல் (அலை) அவர்களை இறைவனின் கட்டளைக்கு இணங்கி, முகங்குப்புற கிடத்தி, அறுத்துப் பலியிட நாடிய போது அவரின் கத்தி தனது சுயதன்மையை இழந்துவிட்டு, அறுக்காமல் போய்விட்டது.

இந்நேரத்தில் இஸ்மாயீல் (அலை) அவர்கள் இறைவனிடமே தமது பொறுப்பை சாட்டி, இறைவனையே சார்ந்து நம்பியிருந்தார்கள். இறைவனும் அவரை பாதுகாத்தான்.

‘நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் ‘தாதுர் ரிகா’ போரை முடித்துக்கொண்டு திரும்பிய போது, கருவேல முள் மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கை அடைந்து, மதிய நேரம் ஓய்வெடுப்பதற்காக மரநிழல் தேடி பல திசைகளிலும் பல நபித்தோழர்கள் பிரிந்து போய்விட்டனர். நபி (ஸல்) அவர்களும் ஒரு முள் மரத்திற்குக் கீழே தங்கி ஓய்வெடுத்தார்கள். அப்போது தம் வாளை அந்த மரத்தில் தொங்கவிட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது ஒரு கிராமவாசி நபியுடைய வாளை உருவிக்கொண்டு, கையில் ஏந்தியபோது நபிகளார் கண்விழித்தார்கள்.

அப்போது அவர் ‘என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘இறைவன்’ என்று பதிலளித்தார்கள்.

பின்னர் அவரை நபி (ஸல்) அவர்கள் தண்டிக்காமல் மன்னித்து விட்டார்கள்’. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), புகாரி).

அந்த கிராமவாசி நபியைக் கொல்ல நாடியபோது, நபி (ஸல்) அவர்கள் தன்னைக் காப் பாற்றும்படி எந்த தோழர்களையும் அழைக்கவில்லை. இறைவனை மட்டுமே நம்பினார்கள். இதுதான் இறைவனை சார்ந்து இருக்கும் உச்சபட்ச நம்பிக்கை.

காரணிகளுடன் இறைவனை நம்புவது அடுத்தகட்டம். உறுப்புகள் தான் காரணிகளை தேடவேண்டும். உள்ளம் முழுமையாக இறைவனையே நம்பியிருக்க வேண்டும்.

“ஒரு மனிதர் நபியவர்களிடம், ‘இறைத் தூதர் அவர்களே, நான் ஒட்டகத்தை கட்டிப்போட்டு இறைவனின் மீது பொறுப்புச்சாட்டவா?, அல்லது அதை அவிழ்த்து விட்டு பொறுப்புச் சாட்டவா?’ என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் ‘நீர் அதை கட்டிப்போட்டு இறைவனின் மீது பொறுப்புச் சாட்டு’ என்று கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: திர்மிதி)

ஒட்டகத்தை கட்டிப்போட்டு விட்டுத்தான் அதை இறைவனின் மீது பொறுப்புச் சாட்டவேண்டுமே தவிர, அதைக்கட்டிப் போடாமல் இறைவன் பார்த்துக்கொள்வான் என்று இறைவனின் மீது பொறுப்பை சுமத்திவிடக்கூடாது.

“ஏமன் தேசத்தினர் ஹஜ் செய்ய வரும்போது, பயணத்திற்கு தேவையானவற்றை தயார் செய்யாமல் ‘நாங்கள் இறைவனை முழுமையாக நம்பியுள்ளோம்’ என்பார்கள். மக்காவிற்கு வந்ததும் மக்களிடம் யாசிப்பார்கள். உடனே இறைவன் இவர்கள் குறித்து ஒரு இறை வசனத்தையே இறக்கிவிட்டான்:

‘(ஹஜ் செய்வதற்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள். திரட்டிக்கொள்ள வேண்டியவற்றில் இறையச்சமே மிகச்சிறந்தது’. (திருக்குர்ஆன் 2:197)

ஒருவர் உழைக்காமல் வீட்டிலேயே இருந்து கொண்டு, ‘இறைவன் எனக்கு உணவு தருவான்’ என்று கூறிக்கொள்ளும் நபர் குறித்து இமாம் அஹ்மது (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு இமாம் அவர்கள் ‘இது ஒரு போதும் நடக்காது. முயற்சி, உழைப்புக்குப் பிறகு தான் இறைவன் தருவான்’ என்று கூறவேண்டும் என விளக்கம் அளித்தார்கள்.

‘நீங்கள் இறைவனின் மீது பொறுப்புச் சாட்டும் விதத்தில் பொறுப்புச் சாட்டினால், காலையில் வெறும் வயிற்றுடன் கூண்டிலிருந்து செல்லும் பறவை, மாலையில் வயிறு நிரம்பி, கூண்டிற்கு திரும்பி அது உணவளிக்கப்படுவது போன்று நீங்களும் உணவளிக்கப்படுவீர்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: உமர் (ரலி), நூல்: திர்மிதி)

பறவையைப் போன்று பறக்க வேண்டாம். பரந்து விரிந்து சென்று அது முயற்சிப்பது போன்று முயற்சித்து, இறைவன் உணவு தருவான் என்று நம்பிக்கை வைக்க வேண்டும். இதுதான் இறைவன் மீது வைக்கப்படும் முறையான நம்பிக்கை. இத்தகையோரைத்தான் இறைவன் நேசிக்கிறான். பொறுப்பை தட்டிக் கழித்து இறைவன் மீது பொறுப்புச் சாட்டுவோரை இறைவன் ஒரு போதும் நேசிக்க மாட்டான்.

‘நம்பிக்கை கொண்டோர் இறைவனையே சார்ந்திருக்க வேண்டும்’. (திருக்குர்ஆன் 3:122)

‘இறைவன் தன்னையே சார்ந்திருப்போரை நேசிக்கிறான்’ (திருக்குர்ஆன் 3:159)

இறைவனை சார்ந்திருப்பது உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தின் அளவு இருக்கவேண்டும். உறுப்புகள் முடங்கிக் கிடக்காமல் முயல வேண்டும். உழைக்க வேண்டும். இதுதான் இறைவனை சார்ந்திருப்பது.

(நம்பிக்கை தொடரும்)

Next Story