உங்கள் வாழ்வில் மகிமையான காரியங்களை தேவன் செய்வார்


உங்கள் வாழ்வில் மகிமையான காரியங்களை தேவன் செய்வார்
x
தினத்தந்தி 1 Nov 2019 9:01 AM GMT (Updated: 1 Nov 2019 9:01 AM GMT)

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! நம்முடைய தேவன் வல்லமையுள்ள தேவன். இன்றும் மகிமையான காரியங்களை, தம்மை விசுவாசிக்கிற ஒவ்வொருவருக்கும் செய்து வருகிறார். அவர் தம்முடைய மகிமை பொருந்திய வல்லமையை வெளிப்படுத்தும் போது அதை ஒருவராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஏனெனில் அவர் மகிமையின் தேவன்.

அப்போஸ்தலர் 7:2 சொல்லுகிறது: ‘அவர் மகிமையின் தேவனாயிருக்கிறார்’.

வேதத்தில் அநேக பரிசுத்தவான்களுக்கு வல்லமையானவர் எப்படி மகிமையான காரியங்களை செய்தாரோ, அப்படியே உங்களுக்கும் செய்வார். திடன் கொள்ளுங்கள், விசுவாசத்தோடு இச்செய்தியை வாசித்து அற்புதங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

சத்துருக்களை அழிக்கிறவர்

‘அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தரைப் புகழ்ந்துபாடின பாட்டு; கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும், குதிரைவீரரையும் கடலிலே தள்ளினார்’. (யாத்திராகமம் 15:1)

மேற்கண்ட வசனம் மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் பாடின பாட்டாகும். நம்முடைய வல்லமையுள்ள தேவன் சத்துருக்களின் சகல வல்லமைகளை அழிக்க வல்லமை உள்ளவராக இருக்கிறார்.

இஸ்ரவேல் ஜனங்களுக்கு விரோதமாய் பார்வோனும் அவன் சேனைகளும் புறப்பட்டு வந்தபோது, கர்த்தர் தம்முடைய வல்லமையினால் கடலை இரண்டாக பிளந்து உலர்ந்த தரையின் வழியாக இஸ்ரவேல் ஜனங்களை கடக்கப் பண்ணினார்.

ஆனால் அவர்களைப் பின் தொடர்ந்து வந்த பார்வோனையும், அவன் சேனை வீரர்களையும் அதே சமுத்திரத்தில் மூழ்கடித்தார்.

இந்த அற்புதத்தை மோசேயும், ஜனங்களும் கண்ட போது தான் ‘கர்த்தர் மகிமையாய் வெற்றி சிறந்தார்’ என்று பாடிப்பாடி கர்த்தரை மகிமைப்படுத்தி உயர்த்தினார்கள்.

உங்களுடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு சத்துரு பின்தொடர்ந்து நீங்கள் முன்னேற முடியாதபடி, உங்களை தடுத்துக் கொண்டிருக்கலாம். அல்லது சத்துரு உங்களை பயத்தின் ஆவிக்குள்ளே தள்ளியிருக்கலாம், அல்லது ஒரு வேளை பிசாசின் கிரியைகளினாலே உங்கள் சரீரம் தாக்கப்பட்டு பெலவீனத்தோடு காணப்படலாம்.

இந்த சூழ்நிலையில் நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்று கேட்டால், ‘கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணும்படி நீங்கள் சும்மாயிருக்க வேண்டும்’. ‘சும்மாயிருக்க வேண்டும்’ என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்றால், ‘தேவனுடைய சித்தத்திற்கு நம்மை பரிபூரணமாய் அர்ப்பணித்து, அவர் கிரியை செய்வதற்கு நாம் இடம் கொடுக்க வேண்டும்’.

அன்றைக்கு மோசே தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக் கொடுத்தபடியினால் சத்துருவாகிய பார்வோனும் அவனுடைய சேனையும் கடலில் மாண்டு அழிந்து போனார்கள். வேதம் சொல்லுகிறது, ‘பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும் படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்’. (I யோவான் 3:8)

இயேசுவின் நாமத்தினால் இந்த சத்தியத்தை விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்ளுங்கள். ஏற்றுக்கொண்ட சத்தியத்தின்படி நடக்க அர்ப்பணியுங்கள். வல்லமையானவர் மகிமையான காரியங்களைச் செய்து உங்களுக்கு விரோதமாக, உங்கள் குடும்பங்களுக்கு விரோதமாக மற்றும் உங்கள் பொருளாதார ஆசீர்வாதத்திற்கு விரோதமாக எழும்பின சகல சத்துருவின் கிரியைகளையும் அழித்து மகிமையான காரியங்களை தேவன் செய்வார்.

மகிமையான அற்புதங்களை செய்கிறவர்

‘இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீடர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்’. (யோவான் 2:11)

இந்நாட்களில் நம் அருமை ஆண்டவர் கிரகிக்க முடியாத மகிமையான அற்புதங்களை செய்து வருகிறார். ஏனெனில் இன்றும் அவர் ஜீவனோடிருக்கிறாரல்லவா?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்னென்ன அற்புதங்களைச் செய்தாரோ அதே அற்புதங்களை இன்றும் செய்து வருகிறார்.

நாமெல்லாரும் அறிந்திருக்கிறபடி வேதத்தில் நம் ஆண்டவர் செய்த முதலாம் அற்புதம் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய அற்புதம்தான். இப்படிப்பட்ட வல்லமையான அற்புதத்தை அவர் செய்த போது யோவான் 2:11 சொல்கிறது, ‘கர்த்தர் தம் மகிமையை வெளிப்படுத்தினார்’.

ஒருவருக்கு அற்புதம் செய்து மற்றொருவரை கைவிடமாட்டார். ஒருவரை உயர்த்தி, மற்றொருவரை தாழ்த்த மாட்டார். ஒருவரை சிநேகித்து மற்றொருவரை கைவிடமாட்டார். நம்முடைய தேவன் பட்சபாதமில்லாதவர்.

அன்றைக்கு கானாவூர் கல்யாண வீட்டில் அற்புதங்களை செய்து தம்முடைய மகிமையை வெளிப்படுத்தின ஆண்டவர் உங்களுக்கும் மகிமையான அற்புதங்களைச் செய்ய வல்லவராயிருக்கிறார்.

அன்றைக்கு கானாவூர் கல்யாண வீட்டிலே வேலைக்காரர்கள் கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து காலியான கற்சாடிகளில் விசுவாசத்தோடு தண்ணீரை நிரப்பினார்கள். அவர் என்ன சொன்னாரோ அப்படியே செய்தார்கள். ஆகவே அன்றைக்கு அற்புதம் நடந்தது.

இந்நாட்களில் உங்களுக்கு அவர் என்ன சொல்கிறாரோ சிறுபிள்ளை போல விசுவாசத்தோடு கீழ்ப்படியுங்கள். கட்டாயம் தேவனுடைய வல்லமையைக் காண்பீர்கள். அவர் தமது மகிமையை உங்களுக்காக வெளிப்படுத்துவார்.

அன்றைக்கு மரியாள் ‘வல்லமையுடையவர் மகிமையான காரியங்களை எனக்குச் செய்தார்’ என்று கர்த்தருடைய நாமத்தை உயர்த்தினது போல நீங்களும் உயர்த்துங்கள். ஒவ்வொரு நிமிடமும் அவருடைய வல்லமையை எதிர்பாருங்கள். அவிசுவாச எண்ணங்களுக்கு சற்றும் இடம் கொடாதிருங்கள். ‘வல்லமையின் தேவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மகிமையான காரியங்களைச் செய்வாராக’.

- சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54

Next Story