திருச்செந்தூரில் ஆடிக் கிருத்திகை விழா... சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஜெயந்திநாதர்


திருச்செந்தூரில் ஆடிக் கிருத்திகை விழா
x

ஆடி கிருத்திகை விழாவையொட்டி, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றன.

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு முருகப் பெருமானின் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். பக்தர்கள் காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் முருகப் பெருமானை வழிபட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.

இந்த ஆண்டு ஜூலை 29, 30 ஆகிய இரு நாட்களுமே கார்த்திகை நட்சத்திரம் உள்ளது. ஜூலை 29 (நேற்று) மதியம் 2.41 மணிக்கு தொடங்கி ஜூலை 30 (இன்று) மதியம் 1.40 மணி வரை கார்த்திகை நட்சத்திரம் உள்ளது. இதனால் இரண்டு நாட்களிலும் விழா கொண்டாடப்பட்டது.

ஆடிக் கிருத்திகைக்கு உரிய தலமான திருத்தணி உள்ளிட்ட பிரதான முருகன் கோவில்களில் நேற்று ஆடிக் கிருத்திகை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. சுவாமி ஜெயந்திநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர்.


Next Story