இறையருளை பெற எளிய வழிமுறை


Kula Deivam
x

ஒருவரது குலதெய்வமே அவரது இஷ்ட தெய்வமாக அமைந்து, அன்றாட பூஜை, ஜபம், பிரார்த்தனை ஆகியவற்றை செய்தால் வாழ்வில் ஏற்படும் குற்றம் குறைகள் விலகி நற்பலன் ஏற்படும்.

நமது ஆன்மிக பாரம்பரியத்தில் இறை வழிபாடு குலதெய்வத்திலிருந்து தொடங்குகிறது. அதன் பின் அவரவர் மன நிலைக்கேற்ப இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்து வழிபடுகிறார்கள். பூஜைகளை செய்து இஷ்ட தெய்வ அருளை பெறுகிறார்கள்.

எதிர்கால சந்ததிகளை வழிவழியாக காக்கும் காவல் தெய்வமாக குலதெய்வத்தை நமது முன்னோர்கள் உருவாக்கினார்கள். அவை குறிப்பிட்ட குடும்பத்தின் நலனுக்காக உயிர்த்தியாகம் செய்த ஆணாக அல்லது பெண்ணாக இருக்கலாம். எப்படி இருந்தாலும் முன்னோர்களால் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வந்த குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்பவர்கள் எவ்வளவு சிக்கல்களை சந்தித்தாலும் அதிலிருந்து மீள முடியும்.

பெண்களை பொறுத்தவரை திருமணத்துக்கு முன் தந்தைவழி குல தெய்வமும், திருமணத்துக்கு பின்னர் கணவன் வழி குலதெய்வமும் அமைகின்றன. அத்துடன் பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டையும் மேற்கொள்ளும்போது பல நன்மைகளை அடைகிறார்கள்.

குலதெய்வ வழிபாட்டை அனைவருமே ஆண்டுக்கு ஒரு முறையாவது முன்னோர் வகுத்த வழியில் செய்ய வேண்டும். திருமணம், நிலம் வாங்குதல், வீடு கட்டுதல், புது மனை புகுவிழா, குழந்தை பெயர் சூட்டல், காது குத்தல், கல்வி ஆரம்பம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளை குலதெய்வ கோவிலில் நடத்துவது விசேஷமானது.

ஒருவரது குலதெய்வமே அவரது இஷ்ட தெய்வமாக அமைந்து, அன்றாட பூஜை, ஜபம், பிரார்த்தனை ஆகியவற்றை செய்தால் வாழ்வில் ஏற்படும் குற்றம் குறைகள் விலகி நற்பலன் ஏற்படும். குலதெய்வம் ஒன்றாகவும், இஷ்ட தெய்வம் வேறாகவும் இருக்கும் நிலையில் இரண்டையும் முறைப்படி பெரியோர்களது வழிகாட்டுதல்படி வழிபட்டு வரவேண்டும்.

ஒருவர் வசிக்கும் தெரு, கிராமம், ஊர், நகரம் ஆகியவற்றில் உள்ள காவல் தெய்வங்களை வழிபடுவதும் பல சிக்கல்களுக்கு மருந்தாக அமைகிறது. அதனால்தான் அனைத்து கிராம, ஊர், நகர எல்லைகளிலும் எல்லை காவல் தெய்வங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நமது வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து சோதனைகளையும் அகற்ற வேண்டுமானால் குல தெய்வம், இஷ்ட தெய்வம், ஊர் காவல் தெய்வம் ஆகிய மூன்று சக்திகளின் அனுக்கிரகம் அவசியம் என்பது ஆன்மிக மரபு ஆகும்.

அவை ஆண் தெய்வ அம்சங்களாக இருந்தால் அமாவாசைக்கு முந்திய நாளான சதுர்த்தசி, அமாவாசை, அடுத்த நாளான வளர்பிறை பிரதமை ஆகிய 3 நாட்களும் தொடர்ச்சியாக வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

பெண் தெய்வ அம்சங்களாக இருந்தால் பவுர்ணமிக்கு முந்திய நாளான சதுர்த்தசி, பவுர்ணமி, பவுர்ணமிக்கு அடுத்த நாளான தேய்பிறை பிரதமை ஆகிய 3 நாட்களும் தொடர்ச்சியாக வழிபாடுகளை செய்து வர வேண்டும்.

அதன் மூலம் அனைவருமே அந்த இறை சக்திகளின் ஆற்றலை பெற்று சங்கடங்களை தீர்த்துக்கொள்ளலாம்.

கட்டுரையாளர்: சிவகிரி ஜானகிராம்


Next Story