பூந்தமல்லி ஊத்துக்காட்டு எல்லையம்மன்: ரூ.10 லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்


பூந்தமல்லி ஊத்துக்காட்டு எல்லையம்மன்: ரூ.10 லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்
x

பூந்தமல்லி ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவிலில் ஆடித்திருவிழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

திருவள்ளூர்

பூந்தமல்லி:

பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில் அமைந்துள்ள மிகப்பழமையான ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவிலில் ஆடித்திருவிழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 10 நாட்கள் இந்தக்கோவிலில் வெகு சிறப்பாக திருவிழா மற்றும் தீமிதித் திருவிழா நடைபெறும்.

பாரம்பரிய சம்பிரதாய முறைப்படி கடந்த 22-ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

இந்நிலையில் 9-ம் நாள் திருவிழாவான நேற்று அம்மனுக்கு ரூ.10 லட்சம் புதிய ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. கோயில் முகப்பு முதல் அம்மன் கருவறை வரை ரூ.50, ரூ.100, ரூ.500, ரூ.2 ஆயிரம் ஆகிய நோட்டுக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story