ஆனிவார ஆஸ்தானம்.. திருமலையில் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி


அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வரவு, செலவு கணக்குகளை சுவாமியிடம் சமர்ப்பிக்கும் ஆனி வார ஆஸ்தானம் எனப்படும் விழா ஆனி மாதம் கடைசி நாளில் பாரம்பரியமாக நடைபெறும். சம்பிரதாய முறைப்படி வரவு, செலவு கணக்குகள் சுவாமி முன் படிக்கப்படும். அதன்பின்னர், சுவாமிக்கு புதிய பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்படும். இந்த சேவையில் கலந்து கொள்ளும் பக்தர்களிடமிருந்து தலா 1 ரூபாய் பெறப்பட்டு புதிய ஆண்டிற்கான கணக்கு தொடங்கப்படும்.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஆனிவார ஆஸ்தான விழா நேற்று நடைபெற்றது. அப்போது அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவில் கோவில் நிர்வாகிகள் சியாமளா ராவ், லோகநாதன், ஸ்ரீனிவாசுலு, ஸ்ரீஹரி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருமலையில் நேற்று மொத்தம் 71,409 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். 26,128 பேர் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல்களில் 4.15 கோடி ரூபாய் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். இலவச தரிசன டோக்கன் கவுண்டர்களில் டோக்கன் வாங்காமல் சென்ற பக்தர்கள் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு... https://www.dailythanthi.com/Others/Devotional


Next Story