ஆனந்த வாழ்வு தரும் அனுமன்


ஆனந்த வாழ்வு தரும் அனுமன்
x

ராமாயணத்தில் கடவுளான ராமருக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாது சேவை புரிந்தவர் அனுமன். அவரது வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதால், அவரை வழிபடுபவர்களுக்கு நவக்கிரக தோஷம் விலகும்.

இறப்பில்லாது வாழ்பவர்களை 'சிரஞ்சீவி' என்று அழைப்பார்கள். ராவணன் தன் அண்ணன் என்றாலும், நியாயத்தின் பக்கம் நின்றான் விபீஷணன். பெருமாளுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற தன்னையே அர்ப்பணித்தான், மகாபலி சக்கரவர்த்தி. சிவனே கதி என்று சரணாகதியில் பக்தி செலுத்தியதால் எமனையே வென்றார், மார்க்கண்டேயர். படிப்பவர்களின் பாவங்களைப் போக்கும் புராணங்களையும், காவியங்களையும் எழுதினார் வியாசர். தாயைக் கொன்று, தந்தையின் சொல்லை செயல்படுத்தியதுடன், மீண்டும் தாயை உயிர்ப்பித்தார் பரசுராமர். கடைசிவரை கட்சி மாறாமல், கவுரவர்களுக்காக தன் வீரத்தை வெளிப்படுத்தினான் துரியோணரின் மகன் அஸ்வத்தாமன். இது போன்ற செய்கையால் மேற்கண்ட ஆறுபேரும் இறப்பில்லா சிரஞ்சீவி வாழ்வைப் பெற்றனர். ஆனால் யார் என்று தெரியாத ராமனுக்காக , எந்த எதிர்பார்ப்பும் இன்றி சேவை புரிந்த அனுமனுக்கும் சிரஞ்சீவி பட்டியலில் இடமுண்டு.

ராவணனை அழிக்கும் பொருட்டு ராமனாக அவதரித்தார், மகா விஷ்ணு. அவருக்கு உதவிபுரிய அனைத்து ஜீவராசிகளும் முன்வந்தன. ராமருக்கு உதவுவதில் தன் பங்கும் இருக்க வேண்டும் என்று நினைத்த சிவபெருமான், தன்னுடைய சக்தியை, ஒரு பெண்ணிடம் தருமாறு வாயுதேவனை பணித்தார். அப்போது கிஷ்கிந்தாவனத்தில் அஞ்சனை என்ற வானரப் பெண், தனக்கு குழந்தை வரம் கிடைக்க சிவபெருமானை வேண்டி தவமிருந்தாள். அவளிடம் ஈசனின் சக்தியை கொண்டு போய் சேர்த்தார், வாயுதேவன். அதன்மூலமாக அஞ்சனைக்கு பிறந்தவர் தான், அனுமன்.

கைகேயியால் வனத்திற்கு அனுப்பப்பட்ட ராமன், அங்கே தன் மனைவியை பறிகொடுக்கிறார். செய்வதறியாத நின்ற ராமனுக்கு, வழிகாட்டியாக , சிறந்தசேவகனாக நின்றவர் அனுமன் தான். அவர்தான் சுக்ரீவனிடம் ராமரை அழைத்துச் சென்றார். வாலிக்கும், சுக்ரீவனுக்கும் இருந்த பகையை முடிவுக்குக் கொண்டு வந்தார். சீதையால் 'சிரஞ்சீவியாக இரு' என்று ஆசீர்வதிக்கப்பட்டார். ராமருக்காக , ராவணனிடம் தூது சென்றார். ராவணனுடனான யுத்தத்தில் இந்திரஜித்தின் அம்புபட்டு மூச்சையான லட்சுமணனை கா ப்பாற்ற சஞ்சீவிமலையை பெயர்த்து எடுத்து வந்தார். 14 ஆண்டு வனவாசம் முடிந்தும் ராமர் திரும்பி வராததால் தீக்குளிக்க முயன்ற பரதனை, காற்றை விட வேகமாகச்சென்று காப்பாற்றினார். மகாபாரத காலத்திலும் கூட, அர்ச்சுனனின் தேரில் கொடியாக இருந்து, அனைத்து ஆபத்துகளையும் தாங்கி நின்றார்.

மகாபாரதத்தில் வரும் கிருஷ்ணன்- அர்ச்சுனன் நட்பை விட உயர்வானது, ராமாயணத்தில் ராமருக்கும், அனுமனுக்கும் உரிய பந்தம். மகா பாரதத்தில் அர்ச்சுனனுக்காக கடவுளான கிருஷ்ணர் துணை நின்றார். ஆனால் ராமாயணத்தில் கடவுளான ராமருக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாது சேவை புரிந்தவர் அனுமன்.இப்படிப்பட்ட பெருமைக்குரியவர் என்பதால்தான் மகா விஷ்ணு, கருடனுக்கு அடுத்தபடியாக தன்னுடைய வாக னமாக அனுமனையும் ஏற்றுக்கொண்டார். அதே சமயம் கருடனுக்கு இல்லாத பெருமை அனுமனுக்கு உண்டு. அது பெரிய திருவடியான கருடன் பெரும்பாலும் பெருமாள் கோவிலில் தனிச் சன்னிதியில் அல்லது பெருமாளுக்கு எதிரில்தான் அருள்பாலிப்பார். ஆனால் அனுமன் பெருமாள் கோவில்களில் இருந்தாலும், அவருக்கென்று தனியாகவும் பல ஆலயங்கள் எழுப்பப்பட்டு இருக்கின்றன . அதற்கு அவரது தியாகமும், தன்னலமற்ற இறை சேவையும்தான் காரணம்.

அனுமன் அவதரித்ததாகக் கூறப்படும் மார்கழி மாத மூல நட்சத்திரமும், அமாவாசையும் இணையும் தினத்தில் அவரை வழிபடுவது சிறப்பானது. அந்த நாளை 'அனுமன் ஜெயந்தி'என்று ஆலயங்களில் வெகுவிமரிசையாக கொண்டாடுவார்கள். அனுமனை வழிபாடு செய்தால், திருமால், சிவன், ருத்ரன், பிரம்மா , இந்திரன், கருடாழ்வார் ஆகியோரை வழிபட்ட பலன் கிடைக்கும். அவரது வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதால், அவரை வழிபடுபவர்களுக்கு நவக்கிரக தோஷம் விலகும். அறிவு கூர்மையாகும், உடல் வலிமை பெருகும். மனஉறுதி ஏற்படும். அச்சம் அகலும். தெளிவு உண்டாகும். வாக்கு வன்மை அதிகரிக்கும். அனுமனை வெண்ணெய் சாத்தியும், வெற்றிலை , வடை ,துளசி, எலுமிச்சைப்பழம் போன்றவற்றால் ஆன மாலைகளை அணிவித்தும் வழிபடுவது சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும்.


Next Story