திருப்பதி: தங்க கருட வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்


திருப்பதி: தங்க கருட வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
x

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான நேற்று இரவு கருடசேவை நடந்தது.

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா பிரமாண்டமாக நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று கருடசேவை நடந்தது.

தங்க கருடசேவை

திருமாலுக்கு இடையறாது சேவை செய்பவர்களில் முக்கியமானவர் கருடன். திருமாலுக்கு கருடன் தாசன், நண்பன், வாகனம், ஆசனம், கொடி, மேல்கட்டி மற்றும் விசிறியாய் திகழ்கிறார். கருடன் வேதத்தால் புகழப்பட்டவர். அவரே வேத சொரூபம். மந்திரங்களில் கருட மந்திரம் சிறப்பு வாய்ந்தது.

பல்வேறு சிறப்புகளை பெற்ற கருடனை கவுரவிக்கும் வகையில் உற்சவர் மலையப்பசாமி தங்கக் கருடவாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வாகனச் சேவையை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கான ஏற்பாடுகள்

கருடசேவையையொட்டி திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தது. 3 லட்சம் பக்தர்களுக்கு கருடசேவை தரிசனம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நேற்று காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை கேலரிகளில் அமர்ந்திருந்த பக்தர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது. அன்னதானக்கூடத்தில் இரவு ஒரு மணி வரை அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக கேலரிகளில் தற்காலிக கழிவறைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. கூடுதல் பணியாளர்களை கொண்டு சிறந்த சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கேலரிகளில் காத்திருந்த பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. பக்தர்கள் குடிநீரை வைத்திருக்க விரும்பினால் டப்பர்வேர் பாட்டில்கள், தாமிர பாட்டில்களை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

சேவை மையம்

கருடசேவை தொடர்பாக தகவல்களை பக்தர்களுக்கு வழங்க ஜி.என்.சி. டோல்கேட், மத்திய வரவேற்பு மையம் (சி.ஆர்.ஓ), பாலாஜி பஸ் நிலையம், ராம் பகீதா தங்கும் விடுதி, ராகிமானு மையம், ஏ.டி.சி.சர்க்கிள், பேடிஆஞ்சநேயர் கோவில் என 7 இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

திருமலையில் உள்ள அமைனிட்டி காம்ப்ளக்ஸ் 4-ல் பொது அறிவிப்பு சேவை மையம் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு தொலைப்பேசி மூலம் பக்தர்களின் சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்பட்டது. அதற்காக இலவச தொலைப்பேசி எண் அறிவிக்கப்பட்டது. மாட வீதிகளில் உள்ள கேலரிகளுக்குள் பக்தர்கள் எளிதில் செல்லும் வகையில் பலகைகள் அமைக்கப்பட்டு இருந்தன. நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் வாயில்கள் எளிதாக செல்லும்படி அமைக்கப்பட்டு இருந்தது.

சைல்டு டாக்

குழந்தைகள் காணாமல் போவதை தடுக்கவும், கூட்ட நெரிசலை பயன்படுத்தி குழந்தை கடத்தலை தடுக்கவும் தேவஸ்தான பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறை மேற்பார்வையில் குழந்தைகளுக்கு "சைல்டு டாக்" கட்டப்பட்டது. ஆக மொத்தம் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விரிவாக ஏற்பாடுகளை செய்திருந்தது.


Next Story